20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் டிஆர்பி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,996 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கிய ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடைந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தும் செய்துகொள்ள விரும்பியோருக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை 4 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், 1996 பணியிடங்கள் மட்டுமே தேர்வில் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுக்கு தயாராகி வருவோர் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர். பிற்சேர்க்கை மூலம் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா என அனைத்து தேர்வர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையின்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல் என 10 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 200 பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான சம்பள செலவினங்களை நடப்பு நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலே மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அந்த 200 பணியிடங்களும் நடப்பு கல்வி ஆண்டிலேயே நிரப்பப்படும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியை பொருத்தவரையில், 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் டிஆர்பி மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள 20 அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 200 காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் அதாவது 100 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும். இதனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டிஆர்பி முதுகலை ஆசிரியர் தேர்வில் காலியிடங்கள் 100 ஆக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2006 ஆக உயரக்கூடும்.
No comments:
Post a Comment