குடியரசு தினம் Vs சுதந்திர தினம் கொடியேற்றும் வேறுபாடுகள்! - Asiriyar.Net

Friday, January 26, 2024

குடியரசு தினம் Vs சுதந்திர தினம் கொடியேற்றும் வேறுபாடுகள்!

 




ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.


குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள கொடியேற்றும் வேறுபாடுகள் மற்றும் அதைப்பற்றிய விரிவான தகவல்களை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.


குடியரசு தினம் ஜனவரி 26 ஆம்  தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல், சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். ஆனால் ஏன் இந்த தினங்களில் கொண்டாடப்படுகிறது என்ற குழப்பம் சிலருக்கு இருக்கலாம். இந்த இரண்டு நாட்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு கொண்டாட்டங்கள் நிகழ்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போன்று இரண்டும் ஒன்று கிடையாது. இரண்டிற்கும் வரலாற்றும், கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் வேறுபாடுகள் உள்ளது. இரண்டு தின கொண்டாட்டத்திற்கும் வேறுபாடுகள் என்ன? இதற்கான வரலாற்று என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.


வேறுபாடு: 

சுதந்திர தினம் என்பது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். அந்நாளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்திய பிரதிநிதிகளுக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு முழுமையாக விடுதலை கிடைத்த நாள் சுதந்திர தினம் என்று அழைக்கப்படுகிறது.


அதே போல சுதந்திரத்துக்கு முன்பும், வாங்கிய உடனும் ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்வதற்காக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களை தான் பயன்படுத்தி வந்தோம். நேரு ரிப்போர்ட், ஜின்னா ரிப்போர்ட், ராஜாஜி ரிப்போர்ட் என்று பல முயற்சிகளுக்கு பின்னர் நமக்கான சொந்த சட்டத்தை நாமே உருவாக்கத் தொடங்கி 1949 நவம்பரில் முடித்தோம். அதை சட்டப்பூர்வமாக ஏற்று சொந்த அரசியல் அமைப்பை கொண்டு வந்த நாள் குடியரசு தினம் ஆனது.


நாளின் முக்கிய புள்ளி : 

முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசு தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது. சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைக்கப்பட்டது. அந்த அரசின் தலைமை பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவஹர்லால் நேரு இருந்தார். அதனால் சுதந்திர தினத்தின் முக்கிய பிரதிநிதியாக அன்று முதல் இன்று வரை பிரதமர் இருந்துவருகிறார்.


இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு, குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 26, 1950-ல் ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார். அதனால் குடியரசு தினத்தின் முக்கிய நபராக குடியரசுத் தலைவர் இருப்பார்.


கொடி ஏற்றுவதும் அவிழ்ப்பதும்: 

சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அப்படி செய்வது கிடையாது. சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத் தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு.


காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். மறுபுறம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது, ​​​​கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் மூவர்ணக்கொடியை அவிழ்த்து விடுவார்.


யார் அவிழ்ப்பார், யார் ஏற்றுவார்? ஏன்? 

முதல் சுதந்திர தினத்தன்று  மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவ நாட்டின் பிரதிநிதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்த பணி இந்திய மக்களின் பிரதிநிதியாக பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த கொடியை ஏற்றினார். இதனால் தான் சுதந்திர தினத்தன்று இன்றும் நாட்டின் பிரதமர் கொடி ஏற்றுகிறார்.


இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, புதிய குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை ஏற்றி வைத்தார். அந்தப் பழக்கமே இன்றும் தொடர்கிறது. அதேபோல் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றுவார்கள். இந்த நடைமுறை 1974ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது.


இடம்: 

இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான மற்றொரு வித்தியாசம் இடம். சுதந்திரம் பெற்று முதலில் முன்னாள் பிரதமர் நேரு, செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றியதால் இன்றும் அதுவே தொடர்கிறது.


மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜ்பாத்தில் கொடியேற்றுகிறார். அதாவது குடியரசின் உயரிய முடிவுகள் எடுக்கப்படும் குடியரசு தலைவர் இருப்பிடம். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை அடங்கிய நிகழ்ச்சி, நாட்டின் வளத்தை உலகிற்குக் காட்டுவதற்காக நடைபெறும்.


Post Top Ad