207 அரசு பள்ளிகள் மூடல் ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் - Asiriyar.Net

Tuesday, August 26, 2025

207 அரசு பள்ளிகள் மூடல் ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

 




தமிழகத்தில் மக்கள் தொகை குறைவு, கரோனா காலத்தில் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்து, பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.


தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்டம் தோறும் தலைமையாசிரியர்களுடன் அமைச்சரின் கலந்துரையாடல் மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார்.


பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவது, அதற்கான சிறப்பான திட்டங்களை கொண்ட தலைமை ஆசிரியர்களிடமிருந்து கருத்துகளை பெற்று அதனை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது, சாதி. மோதல்களில் ஈடுபடும் மாணவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.


முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: “பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக திருநெல்வேலியில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்து ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.


எந்த அரசும் பள்ளிகளை மூட வேண்டும் என நினைப்பதில்லை. கடந்த கல்வியாண்டு முதல் இந்த கல்வியாண்டு வரை புதிதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடியது தொடர்பான செய்திகள் வெளியே வருகிறதே தவிர புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவது குறித்த தகவல்கள் வருவதில்லை. இருந்த போதிலும் மூடப்பட்ட 207 பள்ளிகளில் மூடுவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க களப்பணி மேற்கொண்டு 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டறிந்து, இ- ரிஜிஸ்டரில் பதிவேற்றி இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 2015ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்காக பலர் இடம் பெயர்ந்து சென்றது போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை இல்லாமல் போய் விட்டது. மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் கிராமத்தில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


பி எம் ஸ்ரீ பள்ளியில் மாணவர்களிடையே பேசும்போது,"முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல அனுமன் என கூறியுள்ளார். அவர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசியுள்ளார். அது குறித்து நான் கருத்து கூற முன்வரவில்லை.


ஆனால், நாங்கள் அறிவியல் சார்ந்து, முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறோம். அறிவை சார்ந்து இருக்கும் எங்கள் பாதையில் நாங்கள் செல்லும் போது எங்களோடு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம்" என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad