THIRAN - கூடுதல் காலமும் தொடர் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை! - Asiriyar.Net

Wednesday, August 27, 2025

THIRAN - கூடுதல் காலமும் தொடர் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை!

 




6 - 9 வகுப்புகளில் அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்களுக்கு திறன் என்ற பெயரிலான தனிக்கவனப் பயிற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிகளில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கண்டறியப்பட்ட அனைத்துப் பிள்ளைகளையும் அடிப்படைக் கற்றல் அடைவு பெற வைத்தல் என்ற இலக்கை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடைந்திருக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை.


காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது.


1. அனைத்துப் பள்ளிகளிலும் (குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில்) அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத பிள்ளைகளுக்குத் தனி வகுப்புக் கற்பித்தலை முறையாக செயல்படுத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை, வகுப்பறை இல்லாத நிலை உள்ளன.


2. பல நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையும் தற்காலிக ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையும் உள்ளன. 


3. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதால்  அடிப்பட்டைக் கற்றலுக்கென்று தனி வகுப்புகளை நடத்துவதில் தடைகள் உள்ளன. 


4. அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்கள் பலர் பள்ளி வருகை என்பதும் முழுமையாக இருப்பதில்லை. இந்த மாதமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி பள்ளிக்கு வராத பிள்ளைகளே  கற்றல் அடைவு பெறாதவர்களாக உள்ளனர். 


5. சிறப்பு கவனத்திற்குரிய குழந்தைகளுக்கு (CWSN) அடிப்படைக் கற்றல் அடைவுக்கென்று தனியான கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமானது.


6. ஆகஸ்ட் மாதத்தில் கலைத் திருவிழா மற்றும் இன்ன பிற கல்வி சாரா செயல்பாடுகளையும் வழக்கம் போல நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் எப்போதும் போல பயிற்சிக்கும் அழைக்கப்பட்டார்கள். சீருடைகள் எடுத்து வருதல்,  வங்கிக்குச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள்  செல்ல வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை


7. மற்ற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் இருக்கின்ற ஆசிரியர்களே கவனித்துக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வேண்டியது போன்ற கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 


8. வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாததால் பெற்றோர்கள் 


கேள்வி கேட்பதையும் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.


பல தடைகளையும் கடந்து குழந்தைகளுக்கு அடிப்படைக் கற்றல் அடைவை எப்படியாவது சாத்தியமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று வாரங்களாக பள்ளிகளில் நடந்துள்ளன. ஒரு சில குழந்தைகள் கற்றல் அடைவில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் திறன் செயல்பாட்டின் இலக்கை முழுமையாக எல்லாப் பிள்ளைகளையும் அடையச் செய்துவிட்டோம் என்று சொல்வது நம்மை மட்டுமல்ல குழந்தைகளையும் ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.


அடிப்படைக் கற்றல் அடைவுப் பயிற்சி கூடுதல் காலம் தேவைப்படும் தொடர் பயிற்சியாக அமைய வேண்டும் என்றே தோன்றுகிறது. பிற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் பாதிக்கப்படாத வகையில் அடிப்படைக் கற்றல் அடைவுக்கான சிறப்பு பயிற்சி அமைய வேண்டும். 


மேலும், தொடக்கக் கல்வியில் சரிபாதிக் குழந்தைகள் கற்றல் பின்னடைவுக்கு ஆளாவது இனிமேலும் தொடராமல் தடுப்பதற்கு உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வியே ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே 

அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்  தலைமை ஆசிரியர் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் என்ற நிலையை விரைவில் உருவாக்குவதும்  அவசியமானது. 


கல்வி உரிமைச் சட்டம் 2009, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி முன் பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும் சட்டத்தின் முதன்மையான விதிமுறை செயல்படுத்தப்படவில்லை.


பள்ளி முன் பருவக் கல்வி வழங்கப்படாத ஏழைக் குழந்தைகளே தொடக்கக் கல்வியில் கற்றல் அடைவில் பின்னடைவுக்கு ஆளாகின்றனர். வசதியான குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையிலான கல்வி வாய்ப்பை பெறுவதில் சமமான வாய்ப்பு இல்லாத நிலை தொடக்கக் கல்வி நிலையிலேயே உருவாகியுள்ளது.


1997 வரை நடைமுறையில் இருந்த 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமனம் என்பதை மீண்டும் பின்பற்ற வேண்டும். 


100 குழந்தைகள் மேல் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழு நேரத் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் தொடக்க கல்வியில் ஏற்பட்டு வரும் பின்னடைவை சரி செய்ய முடியாது.


- சு.மூர்த்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு


No comments:

Post a Comment

Post Top Ad