இடைப்பாடி அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது பாலியல் புகாராக கொடுத்த கடிதத்தை ஆசிரியை கிழித்து போட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளிடம் தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சங்ககிரி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் ஆசிரியர் செந்தில்குமரவேலை (58) அதிரடியாக கைது செய்தனர்.
இப்புகார் தொடர்பாக சங்ககிரி டிஎஸ்பி சிந்து, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் செந்தில்குமரவேல் கடந்த ஓராண்டிற்கும் மேலாக 9, 10, 11ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவிகள், பள்ளியின் தலைமை ஆசிரியை சீதாவிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், இதனை பெரிதுபடுத்த வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன், எனக்கூறி மாணவிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகும் அந்த ஆசிரியர் தொல்லை கொடுத்ததால், 3 மாணவிகள் ஒன்று சேர்ந்து, கடந்த மாதம் பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் கடிதம் எழுதி போட்டுள்ளனர். அந்த கடிதத்தை எடுத்த உடற்கல்வி ஆசிரியை விஜி, படித்து பார்த்துவிட்டு உதவி தலைமை ஆசிரியைகளிடம் கூறிவிட்டு கிழித்து போட்டுள்ளார்.
எழுதி போட்ட கடிதத்தின் மீதும் நடவடிக்கை எடுக்காததால், அந்த 3 மாணவிகளும் தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவிற்கு ஆசிரியர் மீதான புகார் கடிதத்தை அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து சேலம் மாவட்ட கலெக்டருக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் வந்துள்ளது. பிறகு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரடி விசாரணை நடத்தி, போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர், என்பது தெரியவந்தது.
தற்போது, மாணவிகளின் புகார் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் இருந்து தலைமை ஆசிரியை சீதா (54), உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி (41), மல்லிகா (55), உடற்கல்வி ஆசிரியை விஜி (46) ஆகியோர் மீது உடந்தையாக இருந்ததாக போக்சோ வழக்கின் உட்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment