Career Choice: உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்வது எப்படி? - Asiriyar.Net

Monday, May 12, 2025

Career Choice: உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்வது எப்படி?

 



தன்னைப் பற்றிய புரிதல், பணி வாழ்க்கையைத் தேர்வு (Career Selection) செய்வதில் மிக முக்கியமானது. 


உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்து படிக்கும் போதும், அதன் பிறகு அது தொடர்புடைய பணிக்கு செல்லும் போதும் உங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி சாதனைகள் படைக்க முடியும். உளவியலாளர் பிராங்க் பார்சன் கருத்துப்படி, பணி வாழ்க்கையைத் தேர்வு செய்வதன் மூன்று முக்கிய காரணிகளுள் ஒன்று தன்னைப் பற்றி அறிதல் ஆகும்.


தன்னைப் பற்றிய புரிதல் மற்றும் படித்து முடித்த பின்பு செய்யப்போகும் வேலையை பற்றிய புரிதல், இவை இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பே வாழ்க்கைப் பணியை (Career Choice) தேர்வு செய்தல் என்கிறார் பிராங்க் பார்சன். ஆய்ந்தறிந்து இதனை அறிவியல் பூர்வமான உளவியல் தேர்வுகள் (Psychometric Test) மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்துதலே கரியர் கவுன்சிலிங்.


இதுகுறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் எம்.கருணாகரன் கூறியது: மாணவர் ஒருவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைந்திருந்தது. 


ஆனால், அவர் மருத்துவப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இது குறித்து அவரது தந்தை கவலையுடன் என்னிடம் தெரிவித்தார். ஆனால், மாணவர் மேலும், தனக்கு இஞ்ஜினியரிங் தான் பிடிக்குமென்றும், அதைத்தான் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவருக்கு நடத்தப்பட்ட உளவியல் தேர்வுகளில் அவருக்கு பொறியியல் பாடம் பொருத்தமானது எனத் தெரியவந்தது.


பின்பு மாணவரின் தந்தையுடன் தனியாகக் கலந்தாய்வு செய்யப்பட்டது. பின்பு மாணவரை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட அவரது தந்தை ஒப்புக்கொண்டார். 


தற்போது அந்த மாணவர் மிகுந்த சந்தோஷத்துடன் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். மாணவருக்கு பொறியியல்தான் படிக்க வேண்டும், பொறியியலில் குறிப்பிட்ட பாடப்பிரிவைத்தான் தேர்வு செய்ய வேண்டும், இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் செய்யப்படவில்லை.


மாணவர் இயல்பான திறன், ஆர்வம், புத்திசாலித்தனம் போன்றவை சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் அறியப்பட்டு, அதனடிப்படையில் மாணவரின் இயல்புக்குப் பொருத்தமான பணி என்ன? மற்றும் அதற்குத் தேவையான படிப்புகள் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டது.


பள்ளிப் படிப்பை முடித்தபின்பு, உயர்கல்வியைத் தேர்வு செய்வதில், பெற்றோர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள், மாணவ, மாணவியரின் மூத்த சகோதர சதோதரிகள் மற்றும் நண்பர்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. சில பெற்றோர்கள், தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்களின் பிள்ளைகள் மூலம் நனவாக்க முயலுகின்றனர்.


டாக்டர் தந்தை தனது பிள்ளைகளை டாக்டராக்க விரும்புவதும், ஆடிட்டர் தந்தை ஆடிட்டராக்க விரும்புவதும், இசைக் கலைஞன் தனது பிள்ளை இசைக் கலையைப் பயில வேண்டும் என்று விரும்புவதும் நாம் அறிந்ததே. தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்ற அதீத அக்கறையின் காரணமாக தங்கள் பிள்ளைகளின் திறன் என்னவென்று தெரியாமலேயே உயர்கல்வியைத் தீர்மானிக்கின்றனர்.


ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது... - மாணவி ஒருவர் பிளஸ் 2 வகுப்பில் கணிதப் பாடப்பிரிவை படித்து இருந்தார். பள்ளிக்கல்வி முழுவதும் ஆங்கில வழியில் (English Medium) படித்து இருந்தார். ஆனால், பெற்றோர்களின் விருப்பத்துக்கு இணங்க கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்தார். 


அவருக்கு கணினி அறிவியல் பாடத்தைப் படிக்கத்தான் விருப்பம் இருந்தது. தமிழ் இலக்கியம் படிப்பதை விரும்பவில்லை. இலக்கியம், கதை, கவிதை போன்றவற்றை விட கணினித்திறன் மற்றும் படைப்பாக்கத் திறன் அவரிடம் மேலோங்கி இருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் மொழியியல் திறன் (Linguistic Intelligence) குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டது.


ஆர்க்கிடெக்சர், கணினி அறிவியல், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளை படிப்பதற்கான இயல்பான திறமை இருந்தும், தனது திறமையை முழுமையாக பயன்படுத்த வழி இல்லாத தமிழ் இலக்கியத்தை பெற்றோர்களின் விருப்பத்துக்கிணங்க தேர்வு செய்தார். இது Unrealistic choice. உங்கள் குழந்தை, அதிபுத்திசாலியாக இருந்து, ஆனால் அத்திறனுக்கு குறைவான அல்லது சமமில்லாத ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பது Unrealistic choice.


உங்கள் மகன் / மகளின் திறன் சராசரியாக இருந்து தேர்ந்தெடுக்கும் படிப்பின் தரம் மிக அதிகமாக இருப்பதும் Unrealistic choice தான். தன்னைப் பற்றிய புரிதல் கரியரை தேர்ந்தெடுப்பதில் ஒரு பாதி எனில், தனது கரியருக்கு பொருத்தமான படிப்புகள், வேலை வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சி மற்றும் உயர்கல்வி போன்ற அனைத்துத் தகவல்களையும் திரட்டுவது மறுபாதி என்கிறார் உளவியலாளர் ராபர்ட் ஹப்போக்.


No comments:

Post a Comment

Post Top Ad