பிளஸ் 2 முடித்தவர்கள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி? - Asiriyar.Net

Monday, May 12, 2025

பிளஸ் 2 முடித்தவர்கள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

 



கல்லூரி காலம் பலரின் கனவுகள் நனவாகும் காலம். விசாலமான கல்லூரி வளாகங்கள் போன்று மாணவ, மாணவரின் பள்ளிக் காலம் முடிந்து, வாழ்வின் அடுத்த கட்ட பெரும்பாய்ச்சலுக்கான காலமே கல்லூரி காலம் தான். 


புதுவித முயற்சிகளையும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் வகையில் கல்லூரிச் சூழல் அமைந்தால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் மிகுந்த நன்மை பயக்கும் என்பது பெற்றோர் மட்டுமின்றி கல்வியாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.


பிளஸ் 2 முடித்தவர்கள் சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி மேல்நிலை ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது அவர்கள் கூறியது: 


முதலில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத புதியதாக துவங்கப்பட்ட கல்லூரியோ அல்லது பாடத்திட்டமோ துவங்கப்பட்டால் கல்லூரியில் படிக்கும் காலமானது விரமானதாகவே இருக்கும். எதிர்கால தேடல்களான வேலைவாய்ப்புக்கு பாதிப்பை உண்டாக்கும்.


இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டம் அமைய வேண்டியது அவசியம். டிஜிட்டல் தொழில் நுட்ப கருவிகள் ஒருங்கிணைப்புடன் கூடிய பாடத் திட்டம் மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டி கற்றல் மேம்படுத்தும். வகுப்பு பாடமும், செயல்வழி பாடமும் சமநிலையில் இருந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.


பொறியியல் கல்லூரி என்றால் சிறந்த உட்கட்டமைப்பு அவசியம். நவீன ஆய்வகங்கள், சமீபத்திய தொழில் நுட்பத்துடன் கூடிய பட்டறைகள் மற்றும் விரிவான தலைப்புகளை கொண்ட நூலங்கள் அமையப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், தங்கள் துறை சார்ந்த உட்கட்டமைப் புகள் எந்த அளவில் உள்ளது என்பதை கல்லூரியில் படிக்கும் சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.


அதேபோல் கல்லூரி பேராசிரியர்களின் கல்வித் திறனை முன்னாள் மாணவர்கள் மூலம் அறியலாம். சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கல்லூரிகளுக்கான தரவரிசையை கருத்தில் கொள்வது நல்லது.


கல்லூரிகளில் செயல்படும் மாணவர் கிளப்புகள், குழுக்கள், தலைமைத்துவம், நேர மேலாண்மை ஆகிய திறன்களை வளர்க்கவும் உதவும் வகையில் கல்லூரி வளாகம் இருக்க வேண்டும். கல்லூரியில் நடத்தப்படும் நேர்காணலும், பங்கு பெறும் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் சதவீதம் ஆகியவை குறித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிக்கோள், லட்சியம், கனவை நனவாக்க வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) வரமாக அமையும்.


கல்லூரி என்பது பலரின் பரவச காலம் மட்டும் இல்லை. கல்லூரி படிப்புக்குபின் வாழ்க்கை இலையுதிர் காலமாக இல்லாமல், கல்லூரி காலம் முழுவதையும் வசந்த காலமாக மாற்றும் ஆற்றல், கல்லூரி மாணவ, மாணவியருக்கே உண்டு என்பதை நம் மனது பக்குவப்படுத்தி கல்லூரியில் சேர்ந்து படித்தாலே வாழ்வில் புதிய திசை நமக்கு கிடைக்கும்.


No comments:

Post a Comment

Post Top Ad