கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் 2 முடித்த பெண்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்தவாறே பி.எஸ்சி. உற்பத்தி அறிவியல் (மேனுபேக்சரிங் அறிவியல்) பட்ட படிப்பை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக பிளஸ் 2 முடிந்தவுடன் உயர் கல்வியை தொடர முடியாத நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாணவிகள், அந்நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே பட்டப் படிப்பை படிக்கும் வகையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தொழில்துறை ஒத்துழைப்பு மையம் உதவி வருகிறது.
இது குறித்து, பாரதியார் பல்கலைக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொழில் துறை ஒத்துழைப்பு மையம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பிளஸ் 2 முடித்த 561 மாணவிகளுக்கு பணி புரியும் இடத்தில் பி.எஸ்சி. உற்பத்தி அறிவியல் பட்டப் படிப்பு கற்று தரப்பட்டு வருகிறது.
பாடத் திட்டத்தில் உற்பத்தி, உற்பத்தி கோட்பாடுகள், தரக் கட்டுப்பாடு நுட்பங்கள், பொது உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறைகளை பற்றியும், 7 வகை தரக் கட்டுப்பாடு, சிஎன்சி, அழகுக்கலை, பாதுகாப்பு, இன்ஜெக்ஷன் மற்றும் அனோடைசிங் பயிற்சி, தரம் மற்றும் நம்பகத்தன்மை சோதனை பயிற்சி ஆகியவை வழங்கப் படுகிறது.
இங்கு பணிபுரிபவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீத மாணவிகள் பட்டப் படிப்பு படித்து வருகின்றனர். அதில் 52 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றவர்கள். மீதமுள்ள 20 சதவீத மாணவிகள் கர்நாடகா, அசாம், ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டிலேயே முதல் முறையாக பெண் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கடந்த 2022-ல் தொடங்கிய பட்ட படிப்பில் இறுதி தேர்வை (6-வது செமஸ்டர்) மாணவிகள் எழுதி வருகின்றனர். இறுதி செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டப்படிப்பு விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவிகள் எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எம்பிஏ மற்றும் எந்தவொரு பட்டப்படிப்புக்கு தகுதியான முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். எந்தவொரு பட்டப்படிப்புக்கு தகுதியான அரசு தேர்வுகளிலும் பங்கேற்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் பிளஸ் 2 முடித்துவிட்டு மாதம் ரூ.15,000 ஊதியம் பெறுவதுடன் மூன்றாவது ஆண்டு இறுதியில் பட்ட படிப்பை பெறலாம். படிப்பை முடிப்பவர்களுக்கு அதே நிறுவனத்தில் உயர் பொறுப்பும், ஊதிய உயர்வும் பெறலாம். சமூக பொருளாதார பின்னடைவு என்ற சுழற்சியை முறியடித்து பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள இத்திட்டம் உதவுகிறது இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment