அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறிய, 'ஸ்லாஸ்' என்ற தேர்வு, மாநில அளவில் நடத்தப்பட்டது. அதில், கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. பெரிய நகரங்களான சென்னை, கோவை பின்தங்கியுள்ளன.
இதுதொடர்பாக, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:
மாநில திட்டக்குழு மேற்பார்வையில், சமக்ர சிக் ஷா, எஸ்.இ.ஆர்.சி., எனப்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் அனைத்து இயக்கங்களும் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவு திறனை கண்டறிய, 'ஸ்லாஸ்' எனப்படும், மாநில அளவிலான தேர்வை நடத்தின.
மாணவர்களின் கற்றல் இடைவெளியை கண்டறிந்து, அதை களைவதற்கான உத்திகளை வடிவமைப்பதே, இதன் நோக்கம். கடந்த பிப்ரவரி 4, 5, 6ம் தேதிகளில், 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தப்பட்டது.
3, 5ம் வகுப்புகளில் அதிகபட்சமாக தலா, 20 மாணவர்கள், 8ம் வகுப்பில் அதிகபட்சமாக தலா, 30 மாணவர்கள் என, 45,924 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9 லட்சத்து 80 ஆயிரத்து, 341 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வுக்காக தமிழ், ஆங்கில வழியில் தலா நான்கு வினாத்தாள் தொகுப்புகளை, எஸ்.இ.ஆர்.சி., வடிவமைத்தது.
3ம் வகுப்பிற்கு 35; ஐந்தாம் வகுப்பிற்கு 45, 8ம் வகுப்பிற்கு, 50 வினாக்கள் இடம் பெற்றன. ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. மாணவர்கள் பதிலளிக்க, 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
தேர்வு நடத்தும் பணியில், கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும், 38,670 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முடிந்ததும், ஓ.எம்.ஆர்., தாள்கள், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், 'ஸ்கேன்' செய்யப்பட்டன.
பின்தங்கிய 8ம் வகுப்பு மாணவர்கள்
அதன்படி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், 3ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில், 67 சதவீதம்; ஆங்கிலத்தில், 69 சதவீதம்; கணிதத்தில், 54 சதவீதம்; சுற்றுச்சூழல் அறிவியலில், 76 சதவீதம் கற்றல் அடைவு திறன் பெற்றுள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், தமிழில், 76 சதவீதம், ஆங்கிலத்தில், 51 சதவீதம், சுற்றுச்சூழல் அறிவியலில், 57 சதவீதம், கணிதத்தில், 57 சதவீதம் கற்றல் அடைவு திறன் பெற்றுள்ளனர்.
8ம் வகுப்பு மாணவர்கள், தமிழில், 52 சதவீதம், ஆங்கிலத்தில், 39 சதவீதம், கணிதத்தில், 38 சதவீதம், அறிவியலில், 37 சதவீதம், சமூக அறிவியலில், 54 சதவீதம் கற்றல் திறனை பெற்றுள்ளனர்.
கடைசி 5 இடங்கள்
அனைத்து வகுப்புகள், அனைத்து பாடங்களிலும், முதல் ஐந்து இடங்களில், கன்னியா குமரி, கடலுார், மதுரை, தென்காசி, சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி, ஈரோடு, செங்கல்பட்டு, சென்னை, கோவை ஆகியவை, கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.
வட்டார அளவில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திருவட்டாறு; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஆகியவை, முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
சென்னை ராயபுரம், செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை, கோவை மாவட்டம் தொண்டாமுத்துார், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், சேலம் ஊரகம் ஆகியவை, கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.
3, 5, 8ம் வகுப்புகளில், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியை விட மேம்பட்டுள்ளது.
8ம் வகுப்பு மாணவர்கள் பின்தங்கியதற்கு, கொரோனா காலத்தில் பள்ளிகள் நடக்காதது முக்கிய காரணம்.
ஒட்டு மொத்தமாக கணிதப் பாடத்தில், மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறைவாக உள்ளது. இவற்றை சரி செய்வதற்கான திட்டங்களை, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து, பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment