ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியலில் 100 / 100 - முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு - Asiriyar.Net

Monday, May 12, 2025

ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியலில் 100 / 100 - முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு

 




சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், கணினி பயன்பாடு பாடத்தில் 4,208 பேர்; வேதியியலில் 3,181; கணிதத்தில் 3,022; இயற்பியலில் 1,125; கணினி அறிவியலில் 9,536 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.


அறிவியல் பிரிவில், 96.99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, மற்ற பாடப்பிரிவுகளை விட மிக அதிகம்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில், ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தவறு நடக்காமல், இவ்வளவு மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவது இயலாத காரியம் என்பது ஆசிரியர்களின் கருத்து.


கடும் மன உளைச்சல்


இதுபோல, எந்தெந்த மாவட்டங்களில், எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:


விழுப்புரம் மாவட்டம், அரசு மாதிரி பள்ளியில், 101 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் ஆறு பேர், வேதியியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேசமயம், செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர்; அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17; செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35; அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 11. அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14; சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 என, மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களில், 167 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.


இதுதவிர 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த தேர்வு மையத்தில், ஒரு தனியார் பள்ளி அறிவியல் பிரிவு மாணவர்கள், 148 பேர் தேர்வு எழுதி உள்ளனர். அவர்களில், 91 பேர் வேதியியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மற்றொரு தனியார் பள்ளியில், 11 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று உள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட தேர்ச்சி கிடைத்தது இல்லை.


இந்த முறை, மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நன்றாகப் படித்து, தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.


கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வியில் அரசியல் புகுந்து விட்டது. அரசியல்வாதிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும்படி, கலெக்டரிடம் சிபாரிசு செய்கின்றனர்.


தரமான கல்வி வேண்டும்


முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கூறி, காப்பி அடிக்க உதவி செய்கின்றனர். இதனால், கல்வியின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்துவது தான் தீர்வாக இருக்கும்.


மேலும், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து, தங்களின் ஆட்சியில், கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதாக பெருமை பேசுவதை தவிர்த்து, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்


No comments:

Post a Comment

Post Top Ad