ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்கிடையே திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், சில ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து, அனைத்து இயக்குநர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை அடுத்து 2016, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட நாள்கள் பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும், பணிக்காலமாக ஏற்கப்படுகிறது.
அந்த வேலைநிறுத்தப் போராட்டங்களின் காரணமாக ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. எனவே, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போராட்டத்தின்போது பணியிடம் மாற்றப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும். இதுசார்ந்து பொது மாறுதல் கலந்தாய்வின்போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment