ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2025 - Asiriyar.Net

Wednesday, January 1, 2025

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2025

 



2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டாக பார்கப்படுகின்றது. இந்த ஆண்டில் பெரிய கிரகங்களான சனி பகவானும் குரு பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இது ஒரு பொறகாலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


நீதியின் கடவுள் என போற்றப்படும் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் கிரகமாக உள்ளார். அவர் தற்போது கும்ப ராசியில் உள்ளார். சனி மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான பெயர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.


கிரகங்களில் முக்கியமான சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். அவர் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். குரு, 2025 மே மாதத்தில் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியும் 2025 ஆம் ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களில் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பாரா செலவுகள் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படும். அதனால் ஆண்டின் முதல் காலாண்டில் உங்கள் முயற்சிகளை செய்து முடித்தால் வெற்றி கிடைக்கும். தங்களின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். காதல் உறவில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.


ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொறுப்புகள் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை நிதி விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். அதன் பின் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உங்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். எனவே டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக புதிய உச்சத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அன்புக்குரியவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் சமத்துவமும் ஒற்றுமையும் நிலவும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு புதிய வாய்ப்புகளுக்கான ஆண்டாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை உங்கள் வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றத்தை கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் எதிர் கொண்டால் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். சமூகத்தில் முக்கிய நபர்களுடன் தொடர்பு கிடைக்கும். காதல் உறவில் உற்சாகமும் ஈர்ப்பும் அதிகரிக்கும். குடும்பத்தினர் மூலம் ஆதாயம் கிடைக்கும்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சவாலான ஆண்டாக அமையும். ஆண்டின் முதல் காலாண்டில் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் நிதானம் தேவை. ஆனால் அதன் பின் நிகழும் கிரக பெயர்ச்சிகள் உங்களுக்கு சாதகமான சூழலை உண்டாக்கும். குடும்பம் மற்றும் காதல் உறவில் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் அவர்களுடன் நல்லிணக்கமாக இருங்கள்.


சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் ஆண்டின் இறுதி வரை சிறப்பாக இருப்பீர்கள். மே மாதம் நிகழும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.


கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உற்சாகம் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் நிதி திட்டங்கள் லாபகரமான முடிவுகளை தரும். மார்ச் மாதம் நிகழும் சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆண்டின் மத்தியில் குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். உங்கள் முயற்சிகளுக்கான முழு ஆதரவும் உங்கள் குடும்பத்தினர், காதல் துணை மற்றும் பிற நபர்கள் மூலம் கிடைக்கும்.


துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உங்களை சுயபரிசோதனை செய்யும் ஆண்டாக விளங்கும். ஆண்டின் முதல் காலாண்டில் குடும்பம் மற்றும் தொழில் விஷயங்களில் கவனமாக இருங்கள். அலுவலகம் சார்ந்த பணிகளில் தகவல் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. காதல் துணையின் மனநிலையை புரிந்து பொறுமையாக செயல்படுவது உறவில் விரிசலை தடுக்கும். ஆண்டின் இறுதியில் படிப்படியாக அனைத்தும் உங்களுக்கு கைகூடி வரும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தீர்க்கமான ஆண்டாக இருக்கும். மார்ச் மாதம் நிகழும் சனிப்பெயர்ச்சியால் ஆண்டின் முதல் காலாண்டில் உங்களுக்கு பெரிய லாப வாய்ப்புகளை பெற்று தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிகழலாம். ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொழில் ரீதியாக சில சாவால்களை எதிர்க்கொள்வீர். எனவே அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். மேலும் நிதி ரீதியாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. காதல் உறவில் விவாதங்களுக்கு இடம் கொடுக்காதீர்.


தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு புதிய, புதிய அனுபவங்களை தரும். ஆண்டின் முதல் காலாண்டில் புதிய வாய்ப்புகள் கைகூடி வரும், புதிய தொடக்கங்களை முன்னெடுப்பதற்கான உகந்த நேரம். ஆனால் எந்தவொரு பெரிய காரியங்களை செய்யும் முன்பாக அனைத்து அம்சங்களையும் ஆராயுங்கள். ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொழில் முன்னேற்றம், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப வாழ்க்கை நல்லிணக்கமாக இருந்தாலும், காதல் உறவு கசக்கும்.


மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நிறைய தன்னம்பிக்கையை கொடுக்கும். மார்ச் மாதம் நிகழும் சனிப்பெயர்ச்சியால் ஆதாயம் அடைய போகும் ராசியாக மகர ராசி உள்ளது. சனிபகவானின் ஆசிர்வாதத்தால் கடின உழைப்பின் பலனை 2025 ஆம் ஆண்டில் பெறுவீர்கள். செப்டம்பர் முதல் ஆண்டின் இறுதி வரை நீங்கள் நினைத்த வேலைகளை முடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு புதிய உயரங்களை அடைய வாய்ப்புகளை வழங்கும்.


கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நிம்மதியான ஆண்டாக இருக்கும். 2025 மார்ச் மாதம் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சி பெறுவதால், சனியின் தாக்கம் கும்ப ராசிக்கு குறையும். ஆண்டின் முதல் காலாண்டில் சில சிரமங்களை சந்தித்தாலும், இரண்டாம் காலாண்டில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பம் மற்றும் தொழில் நிதிச்சுமை மற்றும் பணிச்சுமை குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காதல் உறவில் புரிதல் தேவை.


மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிக்கலாக தெரியலாம். மார்ச் மாதம் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சி பெறுவதால், மீன ராசிக்கு விரைய சனி முடிந்து ஜென்ம சனி தொடங்கவுள்ளது. 2025 ஆம் ஆண்டு முழுவதும் எந்த செயல்களிலும் அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். உங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனதுடன் இருங்கள். குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் சில சச்சரவுகள் வரலாம் என்பதால் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



No comments:

Post a Comment

Post Top Ad