சேலத்தில் விளையாட்டு போட்டிகளில் தோற்ற பள்ளி மாணவர்களை அந்த பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாமலை என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் அந்த பள்ளி மாணவர்கள் அணி கலந்துக் கொண்டு விளையாடி தோல்வி அடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை பள்ளி மாணவர்களை தரையில் அமர வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, ஷூ காலால் எட்டி மிதித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.