தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தஞ்சையை அடுத்த அன்னப்பன் பேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 181 மாணவர்கள் படித்து வருகின்றனர் . 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசு பள்ளி என்றாலே வறுமையின் அடையாளம் தானா அது பெருமையின் அடையாளம் என்பதை உணர்த்தும் வகையிலும் மாணவர்களின் வருகை சதவீதத்தை உயர்த்தும் விதமாகவும்தனியார் பள்ளி சீருடை பார்த்து மாணவர்களுக்கு ஏக்கம் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு மாணவர்களிடம் சிறிய தொகையை பெற்று ஆசிரியர்களுடைய பங்களிப்பால் வண்ண சீருடை வழங்கியுள்ளனர்.
அதன்படி வாரம்தோறும் புதன்கிழமைகளில் வண்ண சீருடைகளில் மாணவர்கள் அணிந்து வரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே மாதிரியான வண்ணங்களில் அனைத்து வகுப்பறைகளையும் உருவாக்கி கலர்ஃபுல்லாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஆளில்லா கடை:
அது மட்டுமல்லாமல் இளம் வயதிலேயே நேர்மையை வளர்க்கஆள் இல்லா கடை 6 ஆம் வகுப்பில் ஏற்படுத்தப்பட்டு ஆரோக்கியமான உணவுகளான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் மற்றும் பென்சில், இங்க் கேட்ரிஜ் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களே அதற்கான காசை உண்டியலில் செலுத்திவிட்டு பொருளை எடுத்து செல்வர்.இதன் மூலம் இளவயதிலேயே உண்மை, நேர்மை குணத்தை வளர்க்க முடிகிறது.இந்த கடையில் கிடைக்கும் இலாபத்தில் வாரம் வாரம் வகுப்பறைக்கு தேவையான பொருட்களை மாணவர்களே வாங்கி கொள்கின்றனர்.
எனது நூலகம்:
மாணவர்களிடையே பாட புத்தகத்தைத் தவிர பல நல்ல நூல்களை கற்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொருவர் வீட்டிலும் மாணவர்கள் நூலகத்தை உருவாக்கி பல்வேறு வகையான புத்தகங்களை சேமித்தும், படித்தும் வருகின்றனர். தஞ்சையில் தற்போது புத்தக திருவிழா நடைபெற்று வரும் நிலையில அங்கும் சென்று பல புத்தகங்களை மாணவர்கள் வாங்கி உள்ளனர்.
எழுத்து மேசை மற்றும் மின்விளக்கு வழங்கும் திட்டம்:
தன்னிறைவு பெற்ற கற்றல் சூழலை மாணவர் வீட்டிலும் ஏற்படுத்திட அவர்களுக்கு எழுத்து மேசை மற்றும் மின்விளக்கு வழங்கப்பட்டு அதன் மூலம் கற்றலில் முன்னேற்றம் ஏற்பட முயற்சி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் மூலம் மாணவர்கள் வீட்டுப்பாடங்களை தினமும் செய்ய ஊக்கப்படுத்த உதவுகிறது.
மாணவர் வங்கி:
மாணவர்களிடம் இளம் வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர் வங்கிதொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சேர்க்கும் தொகையை தன் கற்றலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள பயன்படுத்துகின்றனர்.மீதம் உள்ள தொகை மாணவரின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
நானும் பட்டம் பெறுவேன் திட்டம்:
ஒரு ஆண்டு முழுவதும் வகுப்பு வாரியாக முதல் இரண்டு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் அணியும் அங்கி அணிவித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் உற்சாகம் அடைவதுடன் மற்றவர்களுக்கு நாம் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டுகிறது.
Talent corner
Talent corner அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு மற்ற மாணவர்களுக்கும் ஊக்கத்தை ஏற்பட வழி செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் இடமாகவும் திகழ்கிறது.
மேலும் மாணவர்கள் கைவினைப் பொருட்கள் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் செய்யும் பொருட்களை கண்காட்சி போல் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்விக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் அழகா செயல்படுத்தி வருகின்றனர். அன்னப்பன் பேட்டை அரசு பள்ளி ஆசிரியர்கள். மேலும் இந்த ஒரு அரசு பள்ளி பலரது மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.