ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்ததுடன், அரசாங்க ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியம் அதில் முக்கிய அங்கம் எனவும் தெரிவித்தார்.
"அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். இதனால்தான் சமூக அமைப்பு தொடர்ந்து இயங்குகின்றது. அவர்களுக்கு சமூகத்தில் முக்கிய இடம் உள்ளது" என்றார்.
தேசிய ஓய்வூதிய அமைப்பில் (என்பிஎஸ்) சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேசிய அவர், அதை அரசு பரிசீலித்து வருவதாகவும், தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களின் கண்ணியம் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம் என, பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
"நாட்டின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கும் அனைத்து ஊழியர்களையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இந்த ஊழியர்களின் கண்ணியத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் போகிறது. இந்த நடவடிக்கை, அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் மீது அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது” என அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்போது அமலுக்கு வருகிறது
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
எப்படி கணக்கிடப்படுகிறது
குறைந்தபட்சம் 25 வருட வேலை செய்தோர் ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். 25 ஆண்டுகளுக்குக் குறைவாக வேலை செய்திருந்தால் அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தார்களோ அதற்கேற்ப ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்த யுபிஎஸ் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அரசு வேலையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம்
ஓய்வுபெற்ற ஊழியர் உயிரிழந்தால், அவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அதன் பிறகு ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் மட்டுமின்றி பணியாளர்கள் ஓய்வு பெறும்போது குறிப்பிட்ட தொகையையும் அவர்கள் பெறுவார்கள். ஒவ்வொரு ஆறு மாத முடிவில் அவர்கள் பெற்ற மாத ஊதியத்தில் 1/10 ஆக இது கணக்கிடப்படும். இந்த தொகை ஓய்வூதியத்தைப் பாதிக்காது.
ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்படும். பணவீக்கம் அதிகரிக்கும் போது ஊழியர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.
ஐந்து முக்கிய பகுதிகள்
அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த திட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன என்றார்.
1. குறைந்தபட்சம் 50 சதவீதம் நிலையான ஓய்வூதியம்
அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது நியாயமான கோரிக்கையாகும்." என்றார்.
இந்தத் தொகை ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். ஊழியர் 25 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என்பது இதற்கு நிபந்தனையாக உள்ளது.
நீங்கள் இதை விட குறைவான காலம் (10 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 25 ஆண்டுகளுக்கு குறைவாக) பணி செய்திருந்தால், அதற்கேற்ப ஓய்வூதியம் இருக்கும்.
2. நிலையான குடும்ப ஓய்வூதியம்
பணியில் இருக்கும் போது ஊழியர் மரணம் அடைந்தால், குடும்பத்திற்கு (மனைவி) ஓய்வூதியத்தில் 60 சதவீதம் கிடைக்கும்.
3. குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியம்
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால், ஊழியருக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
4. பண வீக்கத்திற்கு ஏற்ப ஏற்பாடு
பணியாளர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்படும். அதன் பலன் அனைத்து வகையான ஓய்வூதியங்களிலும் கிடைக்கும். அதாவது, பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதிய தொகை ஈடுகட்டப்படும்.
இந்த அகவிலை நிவாரணம், தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த ஏற்பாடு, தற்போது பணியாற்றிவரும் ஊழியர்களுக்கானது.
5. பணிக்கொடை
பணிக்கொடையைத் தவிர (கிராஜுட்டி), வேலையை விட்டு வெளியேறும் போது குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும்.
இது ஊழியர்களின் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்காக கணக்கிடப்படும். இந்த தொகை ஊழியர்களின் நிலையான ஓய்வூதியத்தை பாதிக்காது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எப்படி உருவாக்கப்பட்டது?
“இந்த விஷயத்தை பரிசீலிக்க டாக்டர் சோமநாதன் (நிதி செயலாளராக இருந்தவர்) தலைமையில் பிரதமர் மோதி ஏப்ரல் மாதம் ஒரு குழுவை அமைத்தார்” என, சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள், தொழிலாளர் அமைப்புகளிடம் அக்குழு பேசியது. உலகின் பிற நாடுகளில் உள்ள ஓய்வூதிய அமைப்புகளையும் ஆராய்ந்தது. இந்த செயல்முறைக்குப் பிறகு, அக்குழு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பரிந்துரைத்தது, இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் என்றார்.
இத்திட்டம் ஊழியர்களுக்கு சுமையாக இருக்காது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
“இதற்கு முன்பு ஊழியர்கள் 10 சதவீத பங்களிப்பை அளித்து வந்தனர், மத்திய அரசும் 10 சதவீத பங்களிப்பை வழங்கியது’’ என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
2019 ஆம் ஆண்டில், அரசாங்க பங்களிப்பை 14 சதவிகிதமாக அரசு அதிகரித்தது. தற்போது அரசின் பங்களிப்பு 18.5 சதவிகிதமாக உயர்த்தப்படும்.
"இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும், அதுவரை இதுதொடர்பான விதிகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படும்" என்றார்.
திட்டம் குறித்த கேள்விகள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு வலியுறுத்தி வரும் அத்திட்டத்திற்கான இயக்கத்தின் தேசிய தலைவர் விஜய் குமார் பந்து, அரசின் புதிய அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் என அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் பிபிசி ஹிந்தியின் சந்தன் யாதவிடம் பேசுகையில், "புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும் என்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படை ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதத்தை வழங்க முடியும் என்றால், அதை பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் வழங்கலாமே” என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆதரிக்கும் இயக்கத்தின் மற்றொரு தலைவர் மஞ்சித் சிங் படேல், இந்த ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டத்தைவிட மோசமாக இருக்கும் என, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
"அரசு தனது பங்களிப்பை 18.5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு 50 சதவிகிதம் ஓய்வூதியம், அதாவது பழைய ஓய்வூதியத்திற்கு இணையாக வழங்கப்படும். அதைவிட குறைவான ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு 10,000 ரூபாய் மற்றும் அகவிலை நிவாரணமும் வழங்கப்படும்." என அவர் தெரிவித்துள்ளார்.
"இது தேசிய ஓய்வூதிய திட்டத்தைவிட மோசமான அமைப்பாக இருக்கும்.’ ஏனெனில், நீண்ட காலமாக வேலை செய்பவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைவிட, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அதிக நன்மைகளைப் பெறுவார்கள்." என அவர் பதிவிட்டுள்ளார்.