"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை மக்களுக்குப் பயிர்க் கடன், நகைக்கடன் போன்ற பல்வேறு கடன்களைக் குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் மக்களுக்குக் கூட்டுறவு துறையின் சேவைகள் விரிவாகச் சென்றடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 27-ஆம் தேதி கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ‘கூட்டுறவு’ செயலியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் “கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமுக்கு ரூ.5000 வரை நகைக்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் 12 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இது மாதிரி பல சேவைகள் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகிறது. இந்த சேவைகள் பற்றிய விபரங்களைப் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்துகொள்வதற்காக ‘கூட்டுறவு’ செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது” என்று பேசினார்.
இந்த செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் பற்றின விபரங்களை மக்கள் தெரிந்துகொள்ளலாம் மற்றும் கடன் விண்ணப்பத்தினை கூட சமர்ப்பிக்கலாம்.
இந்த செயலியில் பயிர்க் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை, இ-வாடகை, வங்கி சேவை போன்ற தலைப்புகளில் சேவைகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த செயலியின் மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டு-கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வட்டி 8.5 சதவீதம் மற்றும் கடனை அடைக்க அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் கணிசமான மக்கள் பயன்பெறுவார்கள்.