:''பள்ளிகளில் மாணவர்கள் பிரச்னைகளில் போலீசார் தலையிடக்கூடாது. தலைமையாசிரியர்களே முடிவு எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலினிடம் முக்கியமான நபர் மூலம் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஜாதி ரீதியான மோதல்கள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களில் வள்ளியூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ராதாபுரம், நாங்குநேரி, விஜயநாராயணத்தில் செயல்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாங்குநேரி அரசு மேல்நிலைப்பள்ளி, மருதகுளம் அரசு பள்ளி உள்ளிட்டவைகளில் நடந்த மோதல்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி சவேரியார் கல்லூரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.
பின் அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடம் சிறு தள்ளுமுள்ளு, பிரச்னைகள் வருவது இயல்பு. மாணவர்களின் ஜாதியை குறிப்பிட்டு செய்தி வெளியாவதை தவிர்க்கலாம். ராதாபுரம் அரசு பள்ளியில் நான்கு மாணவர்கள் இத்தகைய பிரச்னைகளில் சிக்கிய போது அதில் சுமுக முடிவு ஏற்படுத்த பெற்றோர்கள் முயற்சித்தனர். வள்ளியூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த பிரச்னையில் சுமூகமாக சமரச முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 3 நாட்களுக்கு பிறகு செய்தி வெளியாகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் ஜாதி மோதல்கள் எங்கும் நடக்கவில்லை. பள்ளிகளில் நடக்கும் மாணவர் பிரச்னைகளில் போலீஸ் தலையிடக்கூடாது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். சஸ்பெண்ட் செய்யலாம். அதற்கான உரிமை தலைமை ஆசிரியருக்கு உள்ளது. பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் சம்பவங்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
போலீசார் தலையீட்டை தடுத்து தலைமை ஆசிரியர்களே நடவடிக்கை எடுக்க ஒரு முக்கியமான ஆள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளேன் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.