அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி - மருத்துவர்களாகும் விவசாய தம்பதியின் மூன்று பிள்ளைகள்! - Asiriyar.Net

Thursday, August 29, 2024

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி - மருத்துவர்களாகும் விவசாய தம்பதியின் மூன்று பிள்ளைகள்!

 



தருமபுரி அருகே விவசாய கூலித் தொழில் செய்யும் ஒரு தம்பதியின் மூன்று பிள்ளைகளும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். எட்டாக் கனியாக இருந்த மருத்துவப் படிப்பு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு கிட்டிய கனியாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளனர் அவர்கள்


தருமபுரி மாவட்டத்தில் இருக்கிறது தண்டுக்காரன்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தை - மாதம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் சந்தியா. அடுத்து ஹரிபிரசாத், சூரிய பிரகாஷ் என இரண்டு மகன்கள். விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வந்த இவர்கள், தங்களின் மூன்று பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் படிக்க வைத்தனர்.


இதில் மூத்த மகளான சந்தியா நன்கு படித்ததால் அவரை மருத்துவராக்க வேண்டும் என லட்சியம் கொண்டிருக்கின்றனர் தாய் தந்தை. 2019-ஆம் ஆண்டு சந்தியா பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தார். இதன்பின்னர் அவரை சென்னையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார் தந்தை. ஆனால் முதல் முறையாக நீட் தேர்வு எழுதிய சந்தியா, போதிய மதிப்பெண் பெறாததால் மருத்துவப்படிப்பில் சேர முடியவில்லை. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் சேர்ந்த அவருக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற மாநில அரசின் அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்தது.



நம்பிக்கையுடன் மீண்டும் நீட் தேர்வெழுதிய சந்தியா 2021-22 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் கற்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாமாண்டு பயின்று வருகிறார்.


மருத்துவப் படிப்பில் சேர்ந்த சந்தியா தன் தம்பி ஹரிபிரசாத்துக்கும் ஆர்வத்தை தூண்டி, ஆலோசனைகளை வழங்கி உத்வேகம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2023-24-ஆம் கல்வியாண்டில் ஹரி பிரசாத் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.


இதேபோல் இளையவர் சூரிய பிரகாஷும் நீட் தேர்வில் வென்று கரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஏழை குடும்பத்தைச் சார்ந்த மாணவன் என்பதால், நீட் பயிற்சிக்கான கட்டணத்தை இவருக்கு ஆசிரியர்களே செலுத்தி படிக்க வைத்துள்ளனர்.


எட்டாக் கனியாக இருந்த மருத்துவப் படிப்பு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு கிட்டிய கனியாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளனர் இவர்கள்.




தன்மூலம், ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.


இதன் பின்னணியில் ஏலகிரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சொந்தச் செலவில் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து விடுகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இது போன்ற ஆசிரியர்களால், அரசுப் பள்ளிகள் சாமானிய மக்களின் நம்பிக்கை ஒளியாக மாறிவருகின்றன!



No comments:

Post a Comment

Post Top Ad