தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பணிக்கொடையினை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டங்கள் கூட நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதன் காரணமாக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல பணிக்கொடையினை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட தலைவருமான கவிஞர் சிங்காரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 1.1.2024-ம் தேதி முதல் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக பணிக்கொடை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையையும் 1.1.2024-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
அதேபோல் மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ. 300-யை ரூ1000-மாக உயர்த்த வேண்டும்.
காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் மஸ்தூர் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பணி வழங்கப்பட வேண்டும். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.