"கல்வி என்ன செய்யும்? - துாய்மை பணியாளர் மகள் நகராட்சி கமிஷனராக நியமனம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து - Asiriyar.Net

Tuesday, August 13, 2024

"கல்வி என்ன செய்யும்? - துாய்மை பணியாளர் மகள் நகராட்சி கமிஷனராக நியமனம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 



துாய்மை பணியாளரின் மகளுக்கு, திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சேகர். மன்னார்குடி நகராட்சியில், துாய்மை பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர்களின் மகள் துர்கா. அரசு பள்ளியில் படித்தார். அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார்.


குடும்ப சூழ்நிலை காரணமாக, 2015ல் துர்காவுக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த நிர்மல்குமாருக்கும் திருமணம் நடந்தது. அவர் தாலுகா அலுவலகத்தில், தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். அரசு பணிக்கு தயாரான துர்கா, குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, நகராட்சி கமிஷனராக தேர்வானார்.


அவருக்கு பணி நியமன ஆணையை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனராக, துர்கா நியமிக்கப்பட்டுள்ளார்.


அவர் அளித்த பேட்டி:


தமிழக அரசு அளித்துள்ள சலுகையை பயன்படுத்தி படித்தாலே, கண்டிப்பாக நல்ல நிலைக்கு வர முடியும். நான் அரசு பள்ளி, அரசு கல்லுாரியில் தான் படித்தேன். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று, நகராட்சி கமிஷனராகி உள்ளேன்.


என் தந்தை துாய்மை பணியாளராக இருந்தார். அவர் சிரமப்பட்டதை பார்த்துள்ளேன். நல்ல வேட்டி, சட்டை கூட அணிந்தது இல்லை. செருப்பு கூட இல்லை. நான் பட்ட கஷ்டத்தை என் குழந்தை படக்கூடாது எனக்கூறி, என்னை படிக்க வைத்தார்.


நல்ல சாப்பாடு கூட அவர் சாப்பிட்டதில்லை. அவர் இருக்கும் போதே, இந்தப் பணியை வாங்கி இருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ஏழு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். என் தாத்தாவும் துாய்மைப் பணியாளராகத் தான் இருந்தார்.


தற்போது நான் நகராட்சி கமிஷனராகி உள்ளேன். இன்று முதல் எங்கள் தலைமுறை மாற்றத்தை காண்கிறது.


இவ்வாறு கூறினார்.


இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:


கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த துர்கா என்பவர், திருத்துறைபூண்டி நகராட்சி ஆணையராக பணி நியமன ஆணை பெற்றார்.


தூய்மை பணியாளரின் மகளான நான் தமிழக அரசின் திட்டங்கள் மூலம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றேன் என துர்கா பேட்டியென்றில் கூறினார்.


துர்காவின் பேட்டியை அறிந்த முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியது, கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து, இங்கு நகராட்சி ஆணையராக உள்ளதை அறிந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் மிக்கது என்பதற்கு துர்கா எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad