அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை, கல்வியை வைத்து போராட்ட அரசியல் செய்ய வேண்டாம், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பை கண்டித்து அதிமுக சார்பில் 24ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத்துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின்கீழ் கொண்டுவர வேண்டுமென 2023-24ல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்த பின் தனிக்குழு அமைக்கப்பட்டதுடன், அமைச்சர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதுகுறித்த அறிக்கை உள்ளது. ஆனால் எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை. இதையெல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம்.
எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. கல்வியை வைத்து கருத்துகளை சொல்லுங்கள்.
கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு, நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்கட்சி தலைவர், எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவெடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது 2026 தேர்தலை மனதில் வைத்து கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.