26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் - நீதிபதி சந்துரு ஆதரவு - Asiriyar.Net

Thursday, May 16, 2024

26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் - நீதிபதி சந்துரு ஆதரவு

 
மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்கள் பணிநீக்கப்பட்ட உத்தரவை ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு வரவேற்றுள்ளார். அதேநேரம் ஆசிரியர் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


மேற்கு வங்கத்தின் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 2016-ம் ஆண்டில்பணிநியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘சட்ட விரோதமாக நடைபெற்ற 2016-ம் ஆண்டு ஆசிரியர் பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் பெற்ற சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவற்றை 12 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் திரும்பி செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.


இந்த தீர்ப்பானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பும், எதிர்ப்பும் காணப்படுகிறது.


இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியதாவது: நம்நாட்டில் அரசு பணிகளில் ஊழல் என்பது புதிதல்ல. முறைகேடான வழியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் துணிச்சலாக அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.


மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு செய்ததால்தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் அவரால் முதல்வராக முடியவில்லை.


தமிழகத்தில் செந்தில் பாலாஜி வழக்கு, பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்கள் நியமன வழக்கு என பல வழக்குகள் இதே ரகம்தான். குறுக்கு வழியில் சட்டவிரோதமாக பணியில் சேருபவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியாது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது அரசியல் ரீதியாகவும் அது பெரியளவில் பிரதிபலிக்கிறது.


மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் இதுவரை வாங்கிய சம்பளத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதாலும் இது பெரியதாக பார்க்கப்படுகிறது. அதுவே 250 ஊழியர்கள் என்றால் வழக்கமான ஒன்றாகிவிடும்.


தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பணம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு பணிகளில் சேருவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மறுபுறம் ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் இந்த உத்தரவுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் அ.மாயவனிடம் கேட்டபோது, ‘‘இந்த வழக்கை மனிதாபிமனத்துடன் அணுகியிருக்க வேண்டும். நியமனம் ரத்து, வட்டியுடன் சம்பளத்தை திரும்பிச் செலுத்துதல் ஆகியவை ஏற்புடையதல்ல. 


ஆசிரியர் நியமன முறைகேடுகள் பற்றி சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும் வரை தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கலாம். இதனால் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் குடும்பங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதில்தீவிர நோய் பாதிப்புக்குள்ளான ஒருவருக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. அதேபோல், மற்றவர்களின் வாழ்வாதாரத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.


அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) தேசிய செயலாளர் வா.அண்ணாமலை கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் இத்தகைய தீர்ப்பை கொல்கத்தா நீதிமன்றம் வழங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 


ஏனெனில், முறைகேடு அடிப்படையில் பணிநியமனம் ரத்து செய்யப்பட்டாலும், ஊதியத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கூறுவது சரியல்ல. ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்கள் பணிகளை முறையாக செய்து வந்துள்ளனர். வேலை செய்தமைக்காக தான் ஊதியம்தரப்பட்டது. எனவே, அதிலிருந்தேனும் விலக்கு அளித்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.Post Top Ad