அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அனுமதி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, July 9, 2023

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அனுமதி

 அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் 5 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்படும் என அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் 2021 ஜூலை 1 முதல் 2025 வரை 4 ஆண்டு தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும். இத்திட்டம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 வகையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். வகைப்படுத்தப்பட்டு உள்ள 7 வகையான நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.


அரிதான நோய் சிகிச்சைகளுக்கு 20 லட்ச ரூபாய் வரை நிதித்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலச்செயலாளர், காப்பீட்டு திட்டத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி அடங்கிய உயர் மட்டக்குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும்.


கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும். கர்ப்பப்பை நீக்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். காப்பீட்டு சந்தா தொகையாக அரசு ஊழியரின் சம்பளத்திலிருந்து மாதம் 300 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படும். அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்கள், மதிப்பூதியம் பெறுபவர்கள், தினக்கூலி, ஒப்பந்தப் பணியாளர்கள், மறு வேலை வாய்ப்பில் பணிக்கு வந்தவர்கள், தற்காலிக பணியாளர்கள், அவுட்சோர்சிங் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்த முடியாது.


அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1169 மருத்துவமனைகளில் மட்டுமே காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். அவசர காரணங்களுக்காக சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்ற பின் பில் தொகையினை பெற்றுக்கொள்ளலாம், என காப்பீட்டு திட்டத்திற்கான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad