குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல தயங்கும் ஆசிரியர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 29, 2023

குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல தயங்கும் ஆசிரியர்கள்

 




தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பணிக்கு செல்வதை சில ஆசிரியர்கள் தண்டனையாக கருதுகிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனையோடு கூறினர். 


சென்னையில் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் உள்ள வீடுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பஸ், பள்ளி, ரேஷன் கடைகள் உள்பட அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தருகிறது. 


இப்பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மாணவ-மாணவிகள் கல்வி கற்பது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. குடிசை மாற்றுவாரியத்தில் வசிக்கும் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


இந்த பகுதிகளில் தற்போது படித்து கல்லூரிக்கு செல்லும் பலரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் தான். பெரும்பாக்கம் பகுதியை பொறுத்தவரை 5 தொடக்கப்பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 


ஆனால், பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த போதிலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால், இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்வதற்கே விரும்புவதில்லையாம். 


இங்கு பணிக்கு செல்வது என்பதையே சில ஆசிரியர்கள் தண்டனையாகவே கருதுகிறார்கள் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனாலே இப்பகுதியில் குழந்தை தொழிலாளர்களும் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வதும் அதிகரிக்கிறது.


இது குறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவஇனியன் கூறியதாவது: செம்மஞ்சேரியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களும், பெரும்பாக்கம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களும் உள்ளன. 


செம்மஞ்சேரியை பொறுத்தவரை சென்னை மாநகராட்சியில் வருகிறது. ஆனால் பெரும்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வரும். இப்பகுதிகளில் உள்ளவர்கள் 12ம் வகுப்பு முடிப்பதே அதிசயம் தான். செம்மஞ்சேரியில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. நடப்பாண்டில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவ-மாணவிகளில் 100 பேரை அந்த கல்லூரியில் சேர்த்து இருக்கிறோம். மேலும் நர்சிங், பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர்த்து, கட்டணம் செலுத்த முடியாத சிலருக்கு பண உதவிகள் செய்கிறோம்.


குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அங்கு உள்ள பெற்றோர் அனைவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். எனவே குழந்தைகள் படிக்கிறார்களா என்று கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை. எனவே அப்பகுதி மாணவர்களை கண்டறிந்து படிக்க ஊக்குவித்து வருகிறோம். எனவே 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடையாதவர்களை பள்ளிக் கல்வித்துறையின் உதவியுடன் மீண்டும் தேர்வுகள் எழுத வைக்க முயற்சித்து வருகிறோம். அரசுக்கு வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். 


பாதுகாப்பு மற்றும் தூரங்களை கருதியே இப்பகுதிக்கு ஆசிரியர்கள் வேலைக்கு வருவதை விரும்புவதில்லை. மேலும் மற்ற மாணவர்களைப்போல் இவர்கள் இல்லை. இவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை. எனவே அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர்களை தேர்வு செய்து பணி அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் முயற்சி: செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது கல்லூரி படிப்பில் நுழைபவர்கள் பலரும் முதல் தலைமுறை பட்டதாரிகளே. அவர்களுக்கு தங்கள் மதிப்பெண்களுக்கான படிப்பை எப்படி தேர்ந்தெடுப்பது, எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, கட்-ஆப் மதிப்பெண் தெரிந்துகொள்வது எப்படி? என்ற எந்த ஒரு புரிதலும் இல்லாமல் தவித்து வந்தனர். எனவே அவர்களுக்காகவே சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் தீரஜ் குமார் ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். 


இந்த இணைய தளத்துக்கு சென்று தங்கள் மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்தால் அதற்கான கட்-ஆப் மதிப்பெண் அதில் வரும் அதனை வைத்து அவர்களுக்கான படிப்பை தேர்வு செய்யலாம்.


மேலும் அனைத்து இந்திய மாணவர் அமைப்புடன் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கணினி வசதிகள் இல்லாமலும், ஆன்லைன் மூலம் எப்படி கல்லூரிக்கு விண்ணப்பிப்பது என்று தெரியாமலும் மாணவர்கள் இருந்து வந்த நிலையில், நாங்கள் நேரடியாக சென்று உதவிகளை செய்து வந்தோம். 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு உதவி செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 


பாதுகாப்பு மற்றும் தூரங்களை கருதியே இப்பகுதிக்கு ஆசிரியர்கள் வேலைக்கு வருவதை விரும்புவதில்லை. மேலும் மற்ற மாணவர்களைப்போல் இவர்கள் இல்லை. இவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை.


Post Top Ad