ஜுலை 15 - பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - அறிவுரைகள் - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 4, 2023

ஜுலை 15 - பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - அறிவுரைகள் - Director Proceedings

 



பொருள்: பள்ளிக் கல்வி - முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலை 15-ஆம் நாள் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.


பார்வை:

1. அரசாணை (நிலை) எண்.72. பள்ளிக் கல்வித் துறை, நாள்.24.05.2006.

2. அரசாணை (நிலை) எண்.169, பள்ளிக் கல்வி (என்) துறை, நாள்.06.07.2012.

பார்வை (1)இல் கண்டுள்ள அரசாணையின்படி, தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுக் கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜுலைத் திங்கள் 15 ஆம் நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்து, 


அந்நாளில் பள்ளிகளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராசர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்திட வேண்டும் எனவும் இவ்விழா பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடப்பது சிறப்பாக அமையும் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது. மேற்கண்டுள்ள அரசாணையின்படி, ஜுலைத் திங்கள் 15 ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


2023-2024 ஆம் கல்வியாண்டில் எதிர்வரும் 15.07.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


மேலும், கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி. கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும், பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும், இவ்விழாவினை பள்ளியின் வளர்ச்சி நிதி அல்லது ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பெறப்படும் மானியத்தைப் பயன்படுத்தி சிறப்பாக நடத்திடவும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,

பள்ளிக் கல்வி இயக்குநர்





Post Top Ad