ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காமல், அரசு பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதில், கூடுதல் வாய்ப்பு வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ.,யின் உத்தரவு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை, 2012ல் தமிழகத்தில் அறிமுகம் ஆனது. இந்நிலையில், 2012 முதல் ஐந்து முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.
மேலும், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,156 பேர்; சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 591 பேர் என, 1,747 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது; தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று அறிவித்தது. இதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகின.
அரசு பணியில் மிகவும் சிரமப்பட்டு சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்தால், அவர்களது குடும்ப எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என, அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, கூடுதல் வாய்ப்புகள் அளித்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற சலுகை அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆண்டுக்கு இரண்டு முறை என, 2011 முதல் 20க்கும் மேற்பட்ட முறை டெட் தேர்வை அரசு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கல்வி தரப்பில் ஐந்து முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
போதுமான எண்ணிக்கையில் தேர்வு நடத்தாமல், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என கூற முடியாது என்பதும், ஆசிரியர்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
எனவே, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, கூடுதல் சலுகை அளிக்கும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment