அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் 1,747 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையில், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1,747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு தகுதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த கட்டமாக இவர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆலோசனையில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாடங்களை நடத்தக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஏற்கனவே 2010 ஆகஸ்ட் 23-ந் தேதிக்கு பின்னர் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன் பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி யாரும் தகுதிப் பெறாமல் பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசுப்பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1,747 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காமல் 32 மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் இரட்டை இலக்கங்களில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 178 பேரும், திருச்சியில் 114 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 100 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 175 பேர் பணியாற்றி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில், சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருபவர்கள், பணியில் நீடிப்பதற்கு எவ்வித தகுதியும் கிடையாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறும்போது, “இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய முடியும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் தொடர முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இவர்களை பணி நீக்கம் செய்வது குறித்த ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment