தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் மக்கள் போராட்டம் நடத்திய போது தூப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் அறிக்கையின் விவரம்:
போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை
போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் நடந்து கொண்டுருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரில் இல்லை எனவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக எண்ணி காவல் துறையினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களை காவலர்கள் தாக்கியுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமாக இருந்த 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் தெரிவிக்கவில்லை. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக விசாரணை ஆணையச் சட்டம், 1952 (மத்திய சட்டம் எண்.60/1952) பிரிவு-3, உட்பிரிவு (1)-ன் கீழ், மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், அரசாணை (பல்வகை) எண்.368, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு-எப்) துறை, நாள் 23.05.2018 மூலம் அரசால் அமைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment