சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியங்கள் - Asiriyar.Net

Tuesday, October 18, 2022

சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியங்கள்

 



ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது மற்றும் அவர் மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியம்காக்கப்பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு திட்டமிட்டே ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட பல பகிரங்கக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்துத் தகவல்களும் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.


ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது மற்றும் அவர் மயக்கமடைந்த பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக்கப்பட்டன.


ஜெயலலிதாவுக்கு இருந்த வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் குறித்து மருத்துவ அறிக்கையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.


ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை தெரிவித்திருந்தது.


ஆனால், நேரடி சாட்சியங்கள், ஜெயலலிதா, டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணிக்கே இறந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். எனவே, வேண்டும் என்றே ஜெயலலிதா மரணம் தாமதமாக அறிவிக்கப்பட்டதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது முதல் அவரது மரணம் அறிவிக்கப்பட்டது வரை அனைத்தும் சசிகலாவினால் ரகசியமாக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. சசிகலா உள்பட நான்கு பேர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இறுதி அறிக்கை தெரிவிக்கிறது.



No comments:

Post a Comment

Post Top Ad