Special TET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - சிலபஸ் எப்படி இருக்கும்? - நிபுணர் விளக்கம் - Asiriyar.Net

Friday, October 17, 2025

Special TET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - சிலபஸ் எப்படி இருக்கும்? - நிபுணர் விளக்கம்

 




சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு; சிலபஸ் எப்படி இருக்கும்? நிபுணர் விளக்கம்


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், பாடத்திட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், டெட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அடுத்த 2026 ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.


இதனைத்தொடர்ந்து சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடத்த உத்தேசமாக திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 24 ஆம் தேதி சிறப்பு தகுதி தேர்வுக்கான முதல் தாள் மற்றும் 25 ஆம் தேதி இரண்டாம் தாள் நடைபெறும். இதற்கான அறிவிக்கை நவம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 


இந்தநிலையில் இந்த சிறப்பு தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் பாடத்திட்டம் குறித்து வின்ஸ்க்ளாஸ் அகாடமி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. வீடியோவின்படி,


பாடத்திட்டம் குறித்து டி.ஆர்.பி இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் டெட் போல் இந்த சிறப்பு தேர்வுக்கான சிலபஸ் இருக்காது. முதற்கட்ட தகவலின்படி, சிறப்பு தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மை பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் 1-5 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறலாம். 


அரசின் நலத்திட்டங்கள் குறித்து 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். அடுத்து கல்வி உளவியல், தமிழ், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 


அனுபவத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்களாக 20 மதிப்பெண்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


இரண்டாம் தாளும் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மை பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் 6-8 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறலாம். 


அரசின் நலத்திட்டங்கள் குறித்து 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். அடுத்து கல்வி உளவியல், தமிழ், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அனுபவத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்களாக 20 மதிப்பெண்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


1 comment:

  1. இதற்கு எதற்கு தேர்வு? சான்றிதழ் அச்சடித்து கொடுத்துவிட்டு தேர்வு நடத்தி விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம்.

    ReplyDelete

Post Top Ad