2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தாமல், 110 விதியின் கீழ் சிறப்பு ஆணை பிறப்பித்து உடனடியாகப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரக்கோணம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரவி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் 3-வது நாளான இன்றும் (அக். 16), கேள்வி நேரத்தின்போது ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.அரக்கோணம் சட்டமன்றத்தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து விளக்கமளித்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர் ரவி எழுப்பிய கோரிக்கை:
சட்டமன்ற உறுப்பினர் ரவி பேசுகையில், "2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தாமல், முதலமைச்சரின் 110 விதியின் கீழ் சிறப்பாணை பிறப்பித்து, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். மேலும், தற்போது 14,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றையும், கூடுதலாக 2025-ஆம் ஆண்டுக்குரிய காலிப் பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பதில்:
அ.தி.மு.க. உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு காட்டும் அக்கறையை எடுத்துரைத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக, ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) வாயிலாக நிரப்பப்படும். 2026-க்குள் மொத்த காலிப் பணியிடங்களையும் கூடிய விரைவில் நிரப்பி, தமிழகப் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், இதில் காலதாமதம் ஏற்பட்டால், 2026-ல் தி.மு.க. ஆட்சி மீண்டும் வரும், அப்போது எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ அதனை அறிந்து பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment