ஆசிரியர்கள் பிரம்பை கையில் எடுப்பதை குற்றமாக கருத முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Saturday, October 25, 2025

ஆசிரியர்கள் பிரம்பை கையில் எடுப்பதை குற்றமாக கருத முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

 



கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரியில் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 


இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பைப்பால் அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த ஆசிரியர் ஷாஜி அவர்களை விலக்க முயற்சித்தார். 


ஆனால் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாததால் ஆசிரியர் பிரம்பால் அவர்களை காலில் அடித்துள்ளார். இதன்பிறகே அந்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் தன்னுடைய மகனை தாக்கிய ஆசிரியர் ஷாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவனின் தந்தை வடக்காஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.


இதையடுத்து ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் ஷாஜி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 


அதில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை விலக்கி விடுவதற்காகத் தான் அவர்களை பிரம்பால் காலில் அடித்ததாகவும், வேறு எந்த நோக்கமும் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப்குமார், ஆசிரியர் ஷாஜி மீது பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: மாணவர்களை திருத்துவதற்காகத் தான் ஆசிரியர்கள் தண்டனை கொடுக்கிறார்கள் என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 


எனவே மாணவர்களை திருத்துவதற்காகவும், பள்ளியில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் ஆசிரியர்கள் பிரம்பை பயன்படுத்துவதை குற்றமாக கருத முடியாது.ஆசிரியரின் இந்த நல்லெண்ணத்தை பெற்றோர் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானதாகும் என்று கூறியுள்ளார்.


1 comment:

  1. Superb 👍....State.....Kerala judge Sir....well said sir👌

    ReplyDelete

Post Top Ad