தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டு முதல் மீண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
கடந்த கல்வி ஆண்டு வரை, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. ஆனால் பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 இன் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த பொதுத்தேர்வுக்கான அட்டவணை, அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்தநிலையில் தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா, பொதுத் தேர்வு அட்டவணையை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக இன்று (அக்டோபர் 24) காலை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை சந்தித்து தேர்வு அட்டவணையை இயக்குனர் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2024-25 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் வாரமே வெளியிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment