நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, இன்று நடத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுடில்லியில் ஆசிரியர்களுக்கு, தேசிய ஆசிரியர் விருது வழங்கும் விழா நடக்கிறது.தமிழகத்தில் முன்கூட்டியே விழா நடத்தப்பட உள்ளது.
சென்னையில், இன்று தலைமை செயலகத்தில் புதிய பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் நல்லாசிரியர் விருதுகளையும் வழங்க உள்ளார்.சென்னை மாவட்டத்தில் தேர்வான, 15 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, 5ம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடக்கிறது. கலெக்டர்கள் தலைமையில் நடக்கும் இந்த விழாக்களில், மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். அந்தந்த மாவட்டத்தில் தேர்வு பெற்றவர்களுக்கு விருது, சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு, 389 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.