தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்று முதல் கணினி பயிற்சி நடத்த தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன.
இந்த பள்ளிகளில் 1 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் வீடுகளில் உள்ளனர். விரைவில் இவர்களுக்கு பள்ளிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு கணினி அறிவு அவசியம் என்பதால், அதன் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, 1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கி 6 நாட்கள் கணினி பயிற்சி அளிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பயிற்சிக்காக ஒரு வட்டாரத்தில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற உள்ள ஆசிரியர்கள் தாங்களே முன்வந்து இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை அந்தந்த மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் போட்டி போட்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். தவற விட்டால் வேறு மையங்களில்தான் பயிற்சி பெற முடியும் என்பது தான் இதற்கு காரணம்.