அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா? எதிர்ப்பும் ஆதரவும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 8, 2021

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா? எதிர்ப்பும் ஆதரவும்

 






`இது எங்களின் தனிமனித உரிமையில் தலையிடும் செயல். விரும்புகிறவர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளட்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது’ என அரசு ஊழியர்கள் கருத்து.


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் பல அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல முக்கிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. `தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.




தனிமனித இடைவெளி


தமிழ்நாட்டில் கடந்த தேர்தலின்போது 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு 88,936 வாக்குசாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன. வாக்களிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


மேலும், வாக்காளர்கள் முகக் கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை முகக்கவசம் அணியாமல் யாரேனும் வந்தால், அவர்களுக்கு வழங்குவதற்காக வாக்குச்சாவடியில் முகக் கவசம் தயார்நிலையில் இருக்கும். வாக்காளர்களுக்கு வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வாக்களிக்கும் நேரம், வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் கூடுதலாக்கப்பட்டிருக்கிறது.



தேர்தல்


இந்தநிலையில்தான், கட்டாய தடுப்பூசி என்ற அறிவிப்பு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர்கள் சிலர், ``’தேர்தல் பணியாற்றக் கூடியவர்கள், முன்கூட்டியே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சொன்னால்கூட அதை ஏற்றுக்கொள்ளலாம். 



ஆனால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... இது எங்களின் தனிமனித உரிமையில் தலையிடும் செயல். விரும்புகிறவர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளட்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. எங்களது கருத்துகளைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்கள்.


அதேசமயம் இவர்களில் மற்றொரு தரப்பினரோ ``’கொரோனா நோய்த் தொற்று அபாயம் விலகாத நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமான ஒன்று. இந்தத் தடுப்பூசியால் எந்தப் பக்கவிளைவும் ஏற்படும் என்பதற்குச் சான்றுகள் இல்லை. எனவே தடுப்பூசி பற்றி கவலைப்பட வேண்டாம். அரசு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட முன்வரும்போது அதைத் தவிர்க்க வேண்டாம். தேர்தல் பணியின்போது பெரும்திரள் மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதால், நமக்கு ஏதும் தொற்று ஏற்படக் கூடாது என்பதுதான் அரசின் முதல் நோக்கம். இதைப் புரிந்துகொண்டு தடுப்பூசி போட முன்வர வேண்டும்’’ எனத் தெரிவித்தார்கள்.







தேர்தல் பணியாற்றுபவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமா? - இந்தக் கேள்விக்கு விடைகாண, தஞ்சை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கோவிந்தராவிடம் பேசினோம். ‘``கொரோனா தடுப்பூசி கட்டாயம் அல்ல. தேர்தல் பணியாற்றுபவர்கள், விரும்பினால் போட்டுக்கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இது அவசியம் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தவில்லை’’ எனத் தெரிவித்தார்.




Post Top Ad