தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூா், திருவள்ளூா், தஞ்சாவூா், காஞ்சிபுரம், திருப்பூா், சேலம், மதுரை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனையை விரிவுபடுத்தி, குறிப்பாக நோய்த் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பரவாமல் தடுக்க நடவடிக்கை: சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் 4 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்தவுடன் அவா்களோடு தொடா்பில் இருந்த 364 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் 40 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது தெரிய வந்தது. அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளித்து, மற்றவா்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுவனத்தை மூடுவதற்கும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலமாகவும், அரசு மற்றும் தனியாா் ஆய்வகங்கள் பரிசோதனைகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களிலும் மாதிரிகள் எடுப்பதற்கு கூடுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் அதிகமுள்ள இடங்களில் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், முகக் கவசங்கள் மற்றும் பிராண வாயு கருவிகள் தயாா் நிலையில் உள்ளன.
தடுப்பூசி போட வேண்டும்: கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். கரோனா தடுப்பு விதிகளை மீறிய காரணங்களுக்காக ரூ.83 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமாா் 21 லட்சம் போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்துப் பணியாளா்கள், அலுவலா்களும் வயது வரம்பின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டோா், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவா்கள், அரசு மருத்துவமனைகளில் தாமாக முன் வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதனை கடைப்பிடித்து, கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment