2வது தேர்தல் பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு. - Asiriyar.Net

Sunday, March 28, 2021

2வது தேர்தல் பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு.

 


சென்னையில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்களில் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு மதியம் சாப்பாடு வாங்கித் தராமல் பட்டினி போட்டதால், அரசு ஊழியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்தனர். சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில், 5,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள், நேற்று சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் நடைபெற்றது.
அதில், ஒன்றாக விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 2,500 அரசு ஊழியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2,500 பேரில் 1000 பேருக்கு மட்டுமே மினி மீல்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள 1,500 பேருக்கு சாப்பாடு கிடைக்காமல் பட்டினியோடு இருந்தனர்.
இது குறித்து அரசு ஊழியர்கள், பயிற்சி வகுப்பு நடத்தும் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அவர் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் மணி 2 கடந்தும் 1500 பேருக்கு உணவு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அரசு ஊழியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து விட்டு சென்றனர். இந்த நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 3ம் தேதி மூன்றாவது கட்டமாக தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்புகளில் இருந்து அரசு ஊழியர்கள் பாதியிலே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், ஆசிரியர்களை பட்டினி போட்ட செயல், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை காட்டுகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தேர்தல் ஆணையம், ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்காமல் ஏமாற்றியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தபால் வாக்குச் சீட்டு வழங்கியதில் குளறுபடி: தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில், வில்லிவாக்கம் தொகுதி வாக்காளராக உள்ளவருக்கு, கொளத்தூர் தொகுதி தபால் வாக்கு சீட்டும், ஆர்கேநகர் வாக்காளருக்கு, ஆயிரம் விளக்கு தொகுதி தபால் வாக்கு சீட்டும் அளிக்கப்பட்டது. இந்த குளறுபடி தொடர்பாக அரசு ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், இதற்கும் அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை. இது திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என்றுஆசிரியர்கள் கூறினர்.Post Top Ad