அஞ்சல் வாக்கு - எந்த இடத்தில் என்ன? எந்தக் கவரில் எது? - Asiriyar.Net

Sunday, March 28, 2021

அஞ்சல் வாக்கு - எந்த இடத்தில் என்ன? எந்தக் கவரில் எது?

 தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! தங்களது மக்களாட்சி உரிமையை நிலைநாட்டும் கடமையைச் செய்ய அஞ்சல் வாக்குச் சீட்டிற்கு விண்ணப்பித்திருப்பீர்கள்.


சட்டமன்றத் தொகுதி உள்ள மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே அஞ்சல் வாக்குச் சீட்டு கிடைத்திருக்கும். கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் வரும் வாரத்தில் அஞ்சல் வழியே வந்து சேர்ந்துவிடும்.
அஞ்சல் வாக்களிக்கத் தரப்படும் காக்கி உறையில் என்னென்ன இருக்கும்? எப்படி நிரப்புவது? எங்கே சமர்ப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.


நமக்கு வழங்கப்படும் காக்கி உறையின் உள்ளே,


1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A)


2. வாக்குச் சீட்டு 


3. இரண்டு உறைகள் (A Cover & B Cover)


4. வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) உள்ளிட்டவை இருக்கும்.வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) படிவத்தைத் தனியே எடுத்து உங்கள் வசமே வைத்துக் கொள்ளுங்கள். இதை உறையில் வைத்து அனுப்பத்தேவையில்லை.1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A) :வாக்காளராகிய நீங்கள் கொடுக்க வேண்டிய உறுதிமொழிப்படிவம் இரு பக்கங்களில் இருக்கும். இதில் முன்பக்கம் மட்டும் நிரப்பினால் போதும். கையொப்பமிடத் தெரியாத / இயலாதவர்களுக்குத் தான் பின் பக்கம்.உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட வேண்டிய தொடர் எண் என்பது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண். இந்த எண் வாக்குச் சீட்டின் பின்புறம் / மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும்.
உறுதிமொழிப் படிவத்தின் மேல்பகுதியில் இடும் உங்களின் கையொப்பமும், வெளி உறையில் (B cover) இடும் கையொப்பமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.


உறுதிமொழிப் படிவத்தின் கீழ்ப் பகுதியில் A / B grade அலுவலர்களிடம் சான்றொப்பம் பெறப்பட வேண்டும். பெரும்பாலும் பயிற்சி மையத்திலேயே இதில் சான்றொப்பமிட வட்டாட்சியர்கள் தயார்நிலையில் இருப்பர். வெளியிடங்களில் பெற வேண்டுமெனில் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடம் சான்றொப்பம் பெறுவது சிறந்தது. எளியதும் கூட.


சான்றோப்பத்துடன் சார்ந்த அலுவலரின் Seal-ஐயும் பெற மறவாதீர்.2. வாக்குச் சீட்டு :


தங்களது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அடங்கிய வாக்குச் சீட்டில் தங்களது வாக்கினை தாங்கள் தேர்வு செய்யக்கூடிய தமிழ்நாட்டின் நலன் பேணும், மக்களின் நலனிற்காகத் தொடர்ந்து இயங்கக்கூடிய கூட்டணியின் / கட்சியின் வேட்பாளரது சின்னத்தில் Ball Point பேனாவில் Tick அடித்து, முன்னர் மடிக்கப்பட்டபடியே மடிக்கவும்.


ஏதேனுமொரு சின்னத்தில் நீங்கள் அடிக்கும் டிக்கைத் தவிர்த்து வேறு எந்தவிதக் குறியீடோ கையொப்பமோ வாக்குச்சீட்டில் இடப்படக் கூடாது.
3. உறை A :


A உறையின்மேல் FORM 13B என்ற தலைப்பிட்டு சில விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.


வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை A உறையின்மேல் உரிய இடத்தில் எழுதவும்.


அதன்பின், டிக் அடித்து மடித்து வைத்திருக்கும் வாக்குச் சீட்டினை A உறையினுள் வைத்து உறையை ஒட்டிவிடவும்.


4. உறை B :


B உறையின்மேல் *FORM 13C* என்ற தலைப்பிட்டு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுலர் முகவரி உள்ளிட்ட  விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.B உறையின்மேல் இடது புறத்தில் தங்களது கையொப்பத்தை இட வேண்டும். இக்கையொப்பம் முன்னர் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட தங்களது கையொப்பத்தை ஒத்திருப்பது அவசியம்.இதன்பின் பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவம் மற்றும் வாக்குச் சீட்டு வைத்து ஒட்டப்பட்ட உறை A ஆகிய இரண்டையும் B உறையின் உள்ளே வைத்து உறையை ஒட்டிவிட வேண்டும்.


அவ்வளவு தான் தங்களது அஞ்சல் வாக்கு தயார்.
இனி, இந்த B உறையை பயிற்சி மையம் / தங்களது தொகுதிக்கான துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Taluk Office) / தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Collector Office) உள்ளிட்ட இடங்களில் உள்ள அஞ்சல் வாக்கிற்கான பெட்டிகளில் போட்டுவிடலாம்.மேற்படி இடங்களுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனில், அருகிலுள்ள அஞ்சலகத்தில் / அஞ்சல் பெட்டியில் அளித்துவிட்டால், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமே கொண்டு சேர்த்துவிடும். இதற்கென Stamp ஏதும் ஒட்டத் தேவையில்லை.நீங்கள் அனுப்பும் அஞ்சல் வாக்கு பூர்த்தி செய்யப்பட்ட உறை, மே-2-2021 அன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் தங்களது தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை அடைந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு மாத கால அவகாசமிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் சேர்த்துவிடுவது நலம்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாக்காளர் எனில், மக்களவை இடைத்தேர்தல் & சட்டமன்றத் தேர்தலுக்கென தனித்தனி படிவங்கள், உறைகள் இருக்கும். அவற்றை மேலே கூறப்பட்டுள்ளதைப் போன்று தனித்தனியே தயார்செய்து அனுப்ப வேண்டும்.


நன்றி : தேவராஜன் 

Post Top Ad