கொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு செக் லிஸ்ட்! - Asiriyar.Net

Wednesday, March 24, 2021

கொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு செக் லிஸ்ட்!






உலகையே உலுக்கிவரும் கொரோனா பிரச்னையில், வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்வதும், சுகாதாரத்தை சரியாகக் கடைபிடிப்பதுமே சிறந்த வழியாக உள்ளது. அதற்கேற்ப, அரசும் தனது தரப்பில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மக்கள் அதிகம் சேரும் இடங்கள் மூடல், பொது போக்குவரத்து குறைப்பு, வீட்டிலிருந்து அலுவலகப் பணிகள் செய்ய வலியுறுத்தல், பொது இடங்களில் சுகாதார நடவடிக்கையில் தீவிரம் என்று செயல்பட்டுவருகிறது.



அதுபோல நம் பக்கமிருந்தும் செய்யவேண்டிய விஷயங்கள் உள்ளன. வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சுத்தத்தைக் கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமானது. குறிப்பாக, கொரோனா விடுமுறையால் விளையாட்டு உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள், மறந்துவிடாமல் சுத்தத்தைப் பின்பற்ற, செக் லிஸ்ட் உட்பட சில வழிமுறைகளை சுவாரஸ்யமாகக் கையாள வைக்கலாம்.






உங்கள் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக ஒரு செக் லிஸ்ட் சார்ட் தயார்செய்யுங்கள். ஆளுக்கு ஒரு A4 வெள்ளைத்தாள் போதும். அதில் ஒரு பக்கம் சிறியதாக, அது யாருடைய செக் லிஸ்ட்டோ அவர் பெயர். பிறகு, `கொரோனா க்ளினிங் செக் லிஸ்ட்' என்பது போன்று பெரிய அளவிலான எழுத்தில், ஸ்கெட்ச் பேனாவால் குழந்தைகளே எழுத வேண்டும். அந்தக் கிருமியின் கார்ட்டூன் படத்தையும் வரையட்டும்.

பின்னர், கைகழுவல், டவலில் துடைத்தல் என்று பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொன்றையும் எழுதி, ஒவ்வொன்றுக்கும் பல கட்டங்கள் பிரித்துக்கொள்ள வேண்டும். (பார்க்க: மாடல் படம்).


இந்த செக் லிஸ்ட்டை சுவர் அல்லது பீரோ, கதவு என எங்காவது ஒட்டிவையுங்கள் அல்லது நூலில் கட்டி தொங்கவிடுங்கள். பின்னர், ஒவ்வொருமுறை கை கழுவியதும், டவலில் துடைத்துக்கொண்டதும், அந்த லிஸ்ட்டில் உள்ள ஒரு கட்டத்தில் டிக் அடிக்க வேண்டும். மறக்காமல், நேரத்தையும் குட்டியாக எழுத வேண்டும்.

அன்றைய தினம் இரவு, யார் எத்தனை முறை கை கழுவினார்கள், டவலில் துடைத்தார்கள் எனப் பார்க்கலாம்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக கைகுட்டை அல்லது டவலும் இருக்கட்டும். அந்த டவலை குறிப்பிட்ட முறை துடைக்கப் பயன்படுத்திய பிறகு, துவைக்கப் போட்டதையும், அடுத்த நாள் புதிய டவல் எடுத்துக்கொண்டதையும் செக் லிஸ்ட்டில் குறிப்பிடலாம்.






இதேபோல, நாம் அதிகம் கைப்பிடியைத் தொட்டு, திறந்து மூடிப் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் இடங்களிலும் ஒரு வெள்ளைத்தாள் அல்லது குறிப்பு எழுதும் ஸ்டில் பேப்பரை ஒட்டி வையுங்கள்.

உதாரணமாக... பீரோ, குளிசாதனப்பெட்டி, வாசல் கதவு, மொட்டைமாடி கதவு இப்படி. அவற்றின் அருகிலேயே பென்சில் அல்லது பேனாவையும் வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் அவற்றை யாரெல்லாம் தொட்டுப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அங்கு ஒட்டியிருக்கும் குறிப்பேட்டில் சின்னதாக கையொப்பமிட்டு, டிக் அடிக்க வேண்டும்.


அப்படிப் பயன்படுத்திய ஒவ்வொருமுறையும் துடைத்தார்களா, கை கழுவினார்களா என்பதை அறியவே, அந்தக் கையொப்பமும் டிக் அடிப்பதும். அந்தப் பொது கையெழுத்தையும் அவர்களுக்கான தனி செக் லிஸ்ட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

"என்னடா, 10 முறை மொட்டைமாடி கதவைத் திறந்துட்டு போயிருக்கிறதா டிக் போட்டிருக்கே. ஆனா, உன் பர்ஷனல் செக் லிஸ்ட்ல மொத்தமே ஆறு முறைதான் கை கழுவினதா டிக் அடிச்சிருக்கே'' என்று துப்பறியும் புலியாக மாறி, கூடுதல் குறைச்சல் இருந்தால் சொல்லலாம்.


இப்படி பலவற்றைச் சரியாகப் பின்பற்றி, சுத்தமாக இருந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு, நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு ஒருமுறை உங்கள் குழந்தைக்குப் பரிசு இருக்கு என்று சொல்லுங்கள். நிச்சயம், ஆர்வமாகச் செய்வார்கள். உங்களுக்கான பரிசை, குழந்தைகள் ரெடி செய்துகொடுக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள். இன்னும் உற்சாகமாகிவிடுவார்கள். உங்கள் கண்காணிப்பில் அவர்கள் வந்ததுபோல, அவர்கள் கண்காணிப்பில் நீங்கள் வந்ததாகவும் இருக்கும்.




என்ன ஒன்று, சில பஞ்சாயத்துகள் நடக்கும். "புவனேஷ், கை கழுவாமலே டிக் அடிச்சதை நான் பார்த்தேன்ம்மா", "இல்லேம்மா பொய் சொல்றாம்மா",


"நான் சிக்ஸ் டைம் வாஷ் பண்ணினேன். பட், மறந்துட்டதால ஃபோர் டைம்தான் டிக் அடிச்சேன்" - இப்படியெல்லாம் புகார்கள் வரும். நாம பார்க்காத புகார்களா... தீர்க்காத பஞ்சாயத்துகளா? துப்பறிஞ்சு கண்டுபிடிக்காத விஷயங்களா?

அதையெல்லாம் சமாளிச்சு, குழந்தைகளிடம் சுத்தத்தை கடைபிடிக்க வைங்க. நீங்களும் டபுள் கேம் ஆடாம, சுத்தத்தைக் கடைபிடிச்சு, நேர்மையா டிக் அடிச்சு, இந்த செக் லிஸ்ட் விஷயத்தைப் பின்பற்றுங்க. வீட்டுக்குள்ளே ஜாலியா டைம் பாஸ் பண்ண ஒரு விஷயம் கிடைச்சதாகவும் இருக்கும். கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொண்டதாகவும் இருக்கும்.

Post Top Ad