தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு ஓட்டுப்பதிவுக்கு அவகாசம் வழங்க உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 11, 2021

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு ஓட்டுப்பதிவுக்கு அவகாசம் வழங்க உத்தரவு.

 






தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள், ஓட்டுப்பதிவு செய்ய, போதிய அவகாசம் வழங்குவதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மாயவன் தாக்கல் செய்த மனு:தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள், சொந்த தொகுதியில் பணியாற்றினால், தேர்தல் பணி சான்றிதழை பயன்படுத்தி, ஓட்டுப் பதிவு செய்யலாம்; வேறு தொகுதியில் பணியாற்றினால், தபால் ஓட்டு வழியாக பதிவு செய்ய வேண்டும்.தபால் ஓட்டுகள் பதிவுக்கு, ஓட்டுச் சீட்டில் அதிகாரியின் சான்றொப்பம் வேண்டும். ஓட்டுச் சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, அவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. 




அவ்வாறு செலுத்தினாலும், சில நேரங்களில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் தான், தேர்தல் அதிகாரியிடம் போய் சேர்கிறது.தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். அதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மின்னணு இயந்திரம் வாயிலாக ஓட்டுப் பதிவு செய்ய ஏதுவாக, போதிய ஓட்டுச் சாவடிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 




மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சொந்த தொகுதிக்கு வெளியில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வழியாக ஓட்டுப்பதிவு செய்ய அனுமதி அளிக்க இயலாது; தபால் ஓட்டுப் பதிவு செய்யலாம்' என்றார்.




இதையடுத்து, 'தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு, ஓட்டுரிமை மறுக்கக் கூடாது; அவர்கள், தபால் வழியாக ஓட்டுப் பதிவு செய்ய, போதிய அவகாசம் வழங்குவதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.ஓட்டுப்பதிவு செய்ய தவறியவர்களின் எண்ணிக்கை, 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும், ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.


Post Top Ad