தமிழகத்தில் தொடக்கப்பள்ளி (1 முதல் 5ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்கிற கேள்வி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என ஐநா சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக பல மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர்.
இதனால் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் 10 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பிற மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை கற்று வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ள போதிலும் கற்றல் திறனை கருத்தில் கொண்டு நேரடி கல்வி முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் பள்ளிகளில் வருகைப்பதிவு குறைந்து விட்டதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மதிப்பெண்களை கணக்கீடு செய்வதற்கான வழிமுறைகளையும் அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் குழம்பிப்போய் உள்ளனர். இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு நாள் கூட நேரடி வகுப்புகளில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாடுகள் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
தங்களது ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்கள், வகுப்பறை என எதையும் பார்க்காமல் மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் அடியெடுத்து வைப்பது அவர்களின் மனநிலையை பாதிக்கும் என கல்வி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காவது நடப்பு கல்வியாண்டில் கடைசி ஒரு மாதமாவது நேரடி சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் கல்வித்துறை என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment