மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை - 10 பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 2, 2023

மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை - 10 பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

 




பள்ளி மாணவர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில், பள்ளி கல்வி துறை அதிகாரிகளை விசாரிக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி துறை அலுவலகம் மூலம், மாநிலத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 


அதேபோல, தற்போது நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிவருகின்றனர். இதில் தேர்ச்சியாகும் மாணவர்கள், அடுத்தக்கட்டமாக உயர்கல்விக்காக பல்கலை, கல்லூரிகளில் சேர்வது வழக்கம். தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் என மேற்படிப்புகள் உள்ளன.


எனினும் மாணவர்களின் முதல் தேர்வாக, இன்ஜினியரிங் படிப்பே உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிகளவில் இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. 12ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரிகள் மாணவர்-மாணவி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றன. 


இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையில் இருந்து மாணவ, மாணவியர்களின் தகவல்கள் திருடப்பட்டு, தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கு விற்கப்படுவதாக புகார் வெளியானது. குறிப்பாக, ஒரு மாணவரின் விவரம்  ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது.


தகவல்களை பெறவும், பண பரிமாற்றத்துக்கும் நவீன வசதிகளை அதிகாரிகள்-கல்லூரி நிர்வாகங்கள் பயன்படுத்தி, பணம் மற்றும் தகவல் பறிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து  3  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


குறிப்பாக மோசடி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து யார் யார் இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளி கல்வி துறையின் மாவட்ட  திட்ட அலுவலருக்கு சம்மன் அனுப்பி ஏறத்தாழ 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.


மேலும், சந்தேக நபர் ஒருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களின் தகவல்கள் எவ்வாறு வெளியே சென்றது. பள்ளிக்கல்வி துறையின் இணையதளப்பக்கம் பாதுகாப்பு வளையத்தில் இல்லையா, இதில் இடைத்தரகர்கள்  யார் யார்  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மேலும் 10க்கும் மேற்பட்ட  அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



Post Top Ad