அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை 9 மாதங்களில் அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் அரசால் அமைக்கப்பட்டது.
அக்குழு செப்டம்பர் மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்ய, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியது.
மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்தியது.
கடந்த 8 மாதங்களில், 7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழில்நுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.
சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்த வேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
இச்சூழ்நிலையில், இக்குழுவானது ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசுக்கு நேற்று சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு, நிதிநிறுவனங்கள், எல்ஐசி ஆகியவற்றுடனான கலந்தாய்வுகள் மேற்கொண்ட பின், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - DIPR-P.R.No.2326-Pension Scheme - Press Release - (30.09.2025) - Pdf
கண்டனம்:
ஒய்வூதியம் தொடர்பான குழுவுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஓய்வூதியக்குழு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment