அக்டோபர் 3ம் தேதி விடுமுறையாக அறிவித்தால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 2 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
மேலும் அக்டோபர் 04 மற்றும் 05ம் தேதி சனி மற்றும் ஞாயிறு காரணமாக வார இறுதி விடுமுறை இருக்கும். இதற்கு இடையில் வரும் அக்டோபர் 3ம் தேதி, வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லாததால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்த நிலையில், இந்த தகவல் முற்றிலும் போலியானது என்று, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான TN Fact Check திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பரவிய வதந்தியும், ஏற்பட்ட குழப்பமும்
இந்த வாரம் பண்டிகை காலம் என்பதால், தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் அமைந்துள்ளன. அக்டோபர் 1 புதன்கிழமை ஆயுத பூஜை, அக்டோபர் 2 வியாழக்கிழமை விஜயதசமி, அக்டோபர் 4 சனிக்கிழமை மற்றும் அக்டோபர் 5 ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை வர உள்ளது.
இந்த நான்கு விடுமுறை நாட்களுக்கு இடையில் அக்டோபர் 3ம் தேதி, வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது. இதனால், அந்த ஒரு நாளையும் விடுமுறையாக அறிவித்தால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சிலர், "பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 3ம் தேதியை, தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது" என்ற போலியான செய்தியை, நேற்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினர். இந்த செய்தி மிக வேகமாக பரவி, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
TN Fact Check விளக்கம்
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, TN Fact Check தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதில், "அக்டோபர் 3-ம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல! அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்," என்று தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு, தமிழக அரசின் செய்தி குறிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை என்று எண்ணி இருந்த சிலர் வருத்தமடைந்துள்ளனர்.


No comments:
Post a Comment