பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைமை ஆசிரியர்கள் விருப்பத்தின்படி உறுப்பினர்களை நியமிக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது. பள்ளி மேலாண்மைக்குழுவின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் என்று கூறியுள்ள பள்ளி கல்வித்துறை, பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரை நியமிக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு செய்யப்பட இருக்கிறது.
அதில் தலைவர் மற்றும் 24 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் வருகிற 10-ந் தேதி 12 ஆயிரத்து 117 தொடக்கப் பள்ளிகளிலும், 17-ந்தேதி 11 ஆயிரத்து 924 தொடக்கப் பள்ளிகளிலும், 24-ந் தேதி 6,152 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், 31-ந் தேதி 6,868 நடுநிலைப் பள்ளிகளிலும் மறுகட்டமைப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்தவொரு உறுப்பினரையும் தன் விருப்பத்தின்படி நியமிக்கக் கூடாது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகளில் இறுதி வகுப்பு அதாவது, தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரை குழுவில் உறுப்பினராக தேர்வு செய்வதை தவிர்க்கவேண்டும்.
ஏனென்றால், பள்ளி மேலாண்மைக்குழுவின் ஆயுட்காலமாக 2 ஆண்டுகள் அவர்களால் முழுமையாக பணியாற்ற இயலாது. இந்த பெற்றோர் மற்ற நிலைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். மறுகட்டமைப்பு நிகழ்வை எந்த புகாருக்கும் இடமில்லாமல் நடத்தி முடித்த 7 நாட்களுக்குள் உறுப்பினர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்திருக்கிறது.
விழிப்புணர்வு கூட்டம், மறுகட்டமைப்பு நிகழ்வு ஆகியவற்றை நடத்துவதற்கு ஏதுவாக 37,061 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரத்து 871 செலவினத் தொகை விடுவிக்கப்பட்டு இருக்கிறது" இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.