எடப்பாடி அருகே அரசுப்பள்ளியில் 36 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியரை, சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், நெடுங்குளம் கிராமத்திலுள்ள கோனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 36 ஆண்டுகளாக பணியாற்றி வந்த உதவி தலைமை ஆசிரியர் முருகன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து ஆசிரியர் முருகனுக்கு பொன்னாடை அணிவித்தும், ராட்சத மாலை அணிவித்தும் பாராட்டினர். மேலும், மேளதாளங்கள் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் விழா நடத்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர்களும் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் முருகனை வாழ்த்தி வழி அனுப்பினர். பணி ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியரை சாரட் குதிரை வாகனத்தில் அமர வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்த இந்த காட்சி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.