தமிழ்நாடு அரசு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை போன்ற தொழில்முறை படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சிகளை வழங்குவது போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவிகளைபோல் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 7.72 லட்சம் மாணவர்கள் மேல்நிலைக்கல்வி படித்து முடிக்கின்றனர். இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கிவைத்தார். ‘‘இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் மாதம் ரூ.1000 எங்களின் கல்லூரி தேர்வு கட்டணம், விடுதி, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பலவற்றிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என கருத்து தெரிவித்த மாணவர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சரவணகுமார் கூறுகையில், ‘‘நான் அரசியல் அறிவியல் பிரிவு படித்து வருகிறேன். எனது, குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா கூலி வேலை செய்கிறார். அம்மா வீட்டு வேலைக்கு செல்கிறார். இவர்களிடம் புத்தகம் வாங்க, தேர்வு கட்டணம் செலுத்த பணம் கேட்பது கஷ்டமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் நான் கல்லூரி முடித்துவிட்டு மீதமுள்ள நேரத்தில் பார்ட் டைம் பணிக்கு சென்று கொண்டு இருக்கிறேன்.
இந்த பார்ட் டைம் பணியில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் எனது அன்றாட தேவைகளை சரிசெய்து வருகின்றனர். பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இந்த கஷ்டமான சூழ்நிலையில்தான் தமிழ்நாடு முதல்வர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அளிக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கிடைக்கும். இந்த பணத்தை வைத்து படிப்பு செலவு, தேர்வு செலவு போன்றவற்றை பார்த்துக்கொள்வேன். வீட்டில் பணம் கேட்க வேண்டும் என அவசியம் இல்லை. மேலும், இத்திட்டத்தால் இனி பார்ட் டைம் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டு முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த முடியும்’’ என்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மாணவர் சிவகுமார் கூறுகையில், ‘‘நான் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை முருகவேல், தாய் ஜெயந்தி. இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தாலும் என்னை பெற்றோர் படிக்க வைத்துள்ளனர். வெள்ளக்கிணறு அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறேன்.
கல்லூரியில் புரோஜக்ட், உணவு சாப்பிடுவது மற்றும் பேனா உள்ளிட்ட சிறிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் என் பெற்றோர் எனக்கு பணம் அனுப்பினால் தான் வாங்க முடியும். அவர்களிடம் பணம் கேட்க சில நேரங்களில் தயக்கம் இருக்கும். இந்நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் எனக்கு கல்லூரி மூலம் வங்கி கணக்கு துவங்கப்பட்டது.
தற்போது எனது வங்கிக்கணக்கில் ரூ.1000 வந்துள்ளது. இதனை என் படிப்புக்காக செலவு செய்து கொள்வேன். வீட்டில் பணம் கேட்க வேண்டியது இல்லை. இதனை சேமித்து வைத்து தேர்வு கட்டணம் கூட செலுத்த முடியும். இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், “நான் கோவை தனியார் கல்லூரியில் ஐடி இன்ஜினியரிங் படித்து வருகிறேன். சொந்த ஊர் கிருஷ்ணகிரி. அப்பா சங்கர், அம்மா சாலி. இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். மிகவும் வறுமையில் இருந்த நிலையில், எனது அண்ணன் வீட்டு சூழ்நிலை காரணமாக டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
பின்னர், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து என்னை தனியார் கல்லூரியில் படிக்க வைத்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் எனக்கு கிடைக்கும் ரூ.1000 என்பது மிகப்பெரிய தொகை. இதனை எனது கல்விக்கு மட்டுமே பயன்படுத்த உள்ளேன். கல்லூரி படித்து முடித்து அரசு பணியில் சேர இருக்கிறேன். அதற்கான கோச்சிங் கிளாஸ் செல்லவும் இந்த பணம் எனக்கு பயன்படும்’’ என்றார்.
கடலூர் மாணவன் கோகுல் கூறுகையில், ‘‘நான் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு ஐடிஐ-யில் பேசிக் டிசைன் படித்து வருகிறேன். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறேன். அப்பா ஸ்டீபன், தாய் பிரியா. கூலி வேலை செய்கின்றனர். இத்திட்டம் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் பயனுள்ள திட்டம். எனக்கு மாதம் மாதம் கிடைக்கும் பணத்தை விடுதி மற்றும் படிப்பு செலவுக்கு பயன்படுத்தி கொள்வேன். வீட்டில் இருந்து அடிக்கடி பணம் வாங்க வேண்டிய அவசியம் குறையும்’’ என்றார்.
வேளாண் பல்கலைக்கழக மாணவன் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘‘எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. இங்கு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறேன். அப்பா தனசேகரன் அரசு பஸ் கண்டக்டர். தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்தவும், எனது சொந்த பயன்பாட்டிற்கும் வைத்துக்கொள்ள உள்ளேன்’’ என்றார்.
ஈரோட்டை சேர்ந்த மாணவன் விக்னேஷ் கூறுகையில், ‘‘நான் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறேன். அப்பா குமார், அம்மா பச்சியம்மாள். இருவரும் தேங்காய் உறிக்கும் பணிக்கு சென்று வருகின்றனர்.
வீட்டில் வறுமை இருந்தாலும் என்னை அவர்கள் படிக்க வைக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் நான் தான் கல்லூரிக்கு செல்லும் முதல் நபர். எனக்கு படிக்க தேவையான பணம் இல்லாமல் நிறைய கஷ்டப்பட்டு உள்ளேன். யாரிடமும் கேட்க முடியாத நிலையில் இருந்து உள்ளேன். இந்நிலையில், தற்போது முதல்வர் அளிக்கும் ரூ.1000 எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எனது படிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது தேவையை நிறைவு செய்ய முடியும். இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
‘எங்கள் கஷ்டம் போய்விட்டது’ வைரலாகும் வீடியோ
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாணவர்கள் பாராட்டி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஒரு மாணவர், ‘‘அக்காவும் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 ரூபாய் வாங்குகிறார். எனக்கும் தற்போது ரூ.1000 கிடைக்கிறது’’ என்று கூறுகிறார். இன்னொரு மாணவர், ‘‘அம்மாவுக்கு மகளிர் உதவித்தொகை மாதம் 1000 ரூபாய் கிடைக்கிறது. ஒரு ஏழையின் ஆண்டு வருமானமே ரூ.82 ஆயிரம்தான். அதில் பாதி வருமானம் ரூ.36 ஆயிரம் 3 பேருக்கு சேர்த்து ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் வந்துவிடுகிறது. இதன்மூலம் எங்கள் கஷ்டம் போய்விட்டது’’ என்று கூறுகிறார்.