பொய் புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் சமூகத்துக்கு தலைகுனிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 4, 2023

பொய் புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் சமூகத்துக்கு தலைகுனிவு

 


பொய் பாலியல் வழக்கில் தங்களது ஆசிரியர் சிக்க வைக்கப்பட்டதால் அவரை விடுவிக்கக் கோரி அரசு பள்ளி மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.


விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் 4 மாதங்களாக 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 


இதனால் போக்சோ சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இடையே மூண்ட பிரச்சினைகள் காரணமாக குறிப்பிட்ட ஆசிரியர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக தற்போது சொல்லப்படுகிறது. 


இதனை எடுத்துச்சொல்லி அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆசிரியர்களுக்கு இடையிலான உட்பூசலால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது மிகவும் கவலைக்குரிய பிரச்சினையாகும். ஆசிரியர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள ''மொட்டை கடுதாசி' எழுதுவது, பொய் பாலியல் புகார் அளிப்பது போன்ற மோசமான காரியங்களில் ஈடுபடுவது பள்ளிக்கூடங்கள் முதல் பல்கலைக்கழகங்கள்வரை நடைபெற்று வருகிறது.


பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ஆசான் கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது போக்சோ சட்டம். அதேபோன்று, செய்யாத பாலியல் குற்றத்தை ஒரு ஆசிரியர் மீது சுமத்துவது என்கிற தரக்குறைவான செயலும் மன்னிக்க முடியாத குற்றமே.


விசாரணையில், இது பழிவாங்கும் உணர்ச்சியில் ஜோடிக்கப்பட்ட புகார் என்பது நிரூபணமானால் பொய் புகார் அளித்த ஆசிரியர்கள் வெறும் பணிமாறுதல் செய்யப்பட்டால் போதாது. ஆசிரியர் சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் இது போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.









Post Top Ad