விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக திட்டிய ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தங்கல் எஸ். ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாமிநத்தத்தைச் சேர்ந்த கடற்கரை, 42, பொருளாதார ஆசிரியர். அரையாண்டு தேர்வுக்கு தயாராகும் வகையில் நன்றாக படிக்க சொல்லி மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
டிச., 2 சனிக்கிழமையன்று பிளஸ் 1க்கு சிறப்பு வகுப்பு வைத்தார். அன்று ஒரு மாணவர் தாமதமாக வந்ததற்காக ஆசிரியர் திட்டினார். ஆத்திரம் அடைந்த அவர் நேற்று சக மாணவருடன் அரிவாள், கத்தியுடன் பள்ளிக்கு வந்தார்.
ஆசிரியர் கடற்கரை காலை 11:30 மணிக்கு ஓய்வறையில் இருந்தார். அங்கு வந்த இரு மாணவர்களும் ஆசிரியரை தலை, கையில் வெட்டி தப்பினர். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஏ.டி.எஸ்.பி., முருகேசன், டி.எஸ்.பி., தனஜெயன் விசாரித்தனர்.
அந்த இரு மாணவர்களும் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து பின் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிளஸ் 1 படிக்க இங்கு சேர்ந்துள்ளது தெரிந்தது.
திருத்தங்கல் பெரியார் காலனி காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த போது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
டி.எஸ்.பி., கூறுகையில், 'கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரிக்கையில் பொதுவாகவே ஆசிரியர் சரியாக படிக்காத மாணவர்களை திட்டி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆசிரியரை வெட்டியதாக கூறினர்' என்றார்.
No comments:
Post a Comment